தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!!
நம்மில் சிலர் ஆலயத்துக்கு செல்லமாட்டார்கள், செல்பவர்களை நையாண்டி செய்வார்கள் , ”எனக்கு வீடுதான் கோயில் ” என்று தத்துவம் பேசுவார்கள்! ஆனால் வீட்டில் இருந்து டிவி யை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துவார்கள் , அவர்களுக்கான செய்தி இது!
ஆலயத்துக்கு செல்வது, ஆலய தரிசனம், திருவிளக்கு பூஜை, யாகங்கள், உத்சவங்கள் , தேர்த்திருவிழா , திருக்கல்யாணம் , கும்பாபிஷேகம், ஆலய திருப்பணிகள் போன்ற கூட்டு வழிபாடுகளை நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்ததன் தாத்பரியம் என்ன?
தனி மனிதனின் வேண்டுகோள் அரங்கேறாது. மனித இனத்தின் ஒட்டுமொத்தமான குரல் அரங்கேறிவிடும். வேண்டுகோளானது அனைவருக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருசாராருக்கு உகந்ததாக இருந்தாலும், கூட்டான வேண்டுகோள் சமுதாயத்தில் ஏற்கப்பட்டுவிடும்.
கலியுகத்தில் கூட்டு முயற்சிக்கு வெற்றி உண்டு என்கிறது புராணம் (ஸங்கேசக்தி:கலௌயுகெ). தேங்காய் நார் லேசானது. பலவீனமானது. அதேநேரம், பல நார்கள் ஒன்றாக சேர்ந்து கயிறாகி தேர் வடமாக உருமாறும்போது, பெரும் தேரினை நகர்த்தும் அளவுக்கு பலம் பெற்றுவிடும். கயிறாக மாறிய தேங்காய் நார், பலம் பொருந்திய யானையையும் கட்டிப்போட உதவும்.
மரக்கட்டைகள் பல ஒன்றுசேர்ந்து படகாக மாறிவிடும். அதற்கு, ‘ஸங்காதம்’ என்று பெயர். மலையாளத்தில், ‘சங்காடம்’ என்று சொல்வது உண்டு. ‘ஸங்காதம்’ என்றால் ஒன்றாக இணைந்தது என்று பொருள். அதை, கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்துவது உண்டு. மீன் பிடித்து முடித்ததும் கட்டிய மரக்கட்டைகளைப் பிரித்து, கடலோரத்தில் காய வைப்பார்கள். ஆனால், தனியரு மரக்கட்டை கடலில் இறங்கி மீன் பிடிக்க உதவாது. தரம் தாழ்ந்த பொருளும் ஒன்று சேர்ந்தால் காரியத்தை சாதித்துவிடும் என்கிறது புராணம் (அல்பானாமபி ஜந்தூனாம் ஸம்ஹதி: கார்ய ஸாதிகா).
ஆன்மிக சிந்தனையை ஊட்ட ஆலயங்கள் தோன்றின. ஆன்மிகம் தொடாத மகிழ்ச்சி இன்பம் அளிக்காது. எல்லோரும் மகிழ்ச்சியை உணர வேண்டும். எவரையும் துயரம் தீண்டக்கூடாது என்று கூட்டுப் பிரார்த்தனையை வரவேற்கும் ஸனாதனம்.
ஆலயத்தில் ஒட்டுமொத்த மக்களுக்காகவே இறைவனுக் கான பணிவிடை நடந்தேறுகிறது. காலத்தில் மழை பொழிய வேண்டும், பூமி பயிர்வளம் பெற்று செழிப்புற வேண்டும், நாடு கொந்தளிப்பு இல்லாமல் அமைதியைத் தழுவ வேண்டும், மக்கள் பயமின்றி வளைய வர வேண்டும், குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் அவற்றைப் பெற்று மகிழ வேண்டும், ஏழ்மை அகன்று செல்வந்தர்களாக மாற வேண்டும், அனைவரும் முழு ஆயுளைப் பெற வேண்டும், என்று அர்ச்சகர் வேண்டுவார். உடன் இருக்கும் வேதம் ஓதுபவர்கள் ‘ததாஸ்து’ என்று ஒட்டுமொத்தமாக வேண்டுகோளை கூட்டாக அளிப்பார்கள். தடையின்றி, எளிதில் விருப்பத்தை எட்ட கூட்டுப் பிரார்த்தனை உதவும்.
இன்று அவதானித்தீர்கள் என்றால், பல வருடங்களாக கோயிலுக்கு வந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட காலம் இருந்தது. இன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விரிவாக்கம், பலரையும் கோயிலுக்கு வருவதை மறக்க வைத்துவிட்டது. பிரம்மோத்ஸவம், தேர்த் திருவிழா, தீமிதித்தல் போன்ற நிகழ்வுகளின் காட்சிகள் டி.வி. மூலமாக… வீட்டில் நாம் பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் நம்மை வந்து அடைந்துவிடுவதால், ஆன்மிக சிந்தனை மங்கி வருகிறது. சுப்ரபாதமும், தீபாராதனையும் வீட்டுக்கே வந்து சேர்வதால், கோயிலில் கூட்டுப்பிரார்த்தனை அறவே அற்றுவிடுகிறது.
ஒருவனுக்கு செல்வம் வேண்டும். மற்றொ ருவருக்கு வேலை வேண்டும். வேறொருவருக்கு சுகாதாரம் வேண்டும். இப்படி, ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட , தனிப்பட்ட வேண்டுகோள் இருக்கும்போது, அவற்றை நிறைவேற்ற தனிப்பட்ட பிரார்த்தனையே உதவும்.
நாம் செயல்படும் சடங்குகளில் வேதம் ஓதுபவர்களின் கூட்டுப் பிரார்த்தனைதான் வெற்றியை அளிக்கும்.
தனக்கென்று தனியே வேண்டிக்கொள்ளாமல், பிறருக்காகத் தன்னை அர்ப்பணித்து பிரார்த்தனையில் ஈடுபடும்போது, தானும் முன்னேற இடமிருப்பதால், என்றென்றும் கூட்டுப் பிரார்த்தனை தோல்வியைத் தழுவாது.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!!