அற்புதக் கருணைப் பெரு மழை பொழிந்த பொன்னம்பலவாணன்..–நீர்வை மயூரகிரி சிவாச்சாரியார்!

நன்றி: நீர்வை சிவஸ்ரீ தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் அவர்கள்!
அற்புதக் கருணைப் பெரு மழை பொழிந்த பொன்னம்பலவாணன்..
இன்று 27.03.2024 புதன்கிழமை பங்குனி மாத சித்திரை நக்ஷத்திரத்தில் சுன்னாகத்துப் பொன்னம்பலவாணப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடும் வெப்பம் நிலவி வரும் இக்காலத்தில் இன்று பிரதான கும்பம் வெளிப்பிரகாரத்தில் மேற்கு ரத வீதியில் கும்ப வீதியுலா நிகழ்ந்த போது, விநாயகர் விமானம்- நூதனமாக அமைக்கப்பட்ட சஹஸ்ர லிங்க சந்நிதி விமானம் அபிஷேகிக்க திடீர் என்று மழை பொழிந்தது.
ஆனாலும் ஒரே நிமிஷத்தில் மழை நின்று பிரதான கும்ப வீதியுலா தடையின்றி நிகழச்செய்து கோபுர வாசலில் நுழைய மீண்டும் கன மழை தொடங்கியது.
இதற்கிடையில் கருடப் பக்ஷிகள் வானில் வட்டமிட்டுச் சென்றன.
இந்த அற்புத நிகழ்வு அம்பலாணனின் அருள் மழை என்று அன்பர்கள் உள்ளம் குளிர கூத்தாடினர்.
முப்பத்து மூன்று குண்ட பக்ஷ மகா யாக மகா கும்பாபிஷேக விழாவில் இன்று கும்ப வீதியுலாவில் நிகழ்ந்த பல விஷயங்களும் அபூர்வமானவை. .
வேதியர்கள் இரு குழுவாக ஒரு குழு ஸ்ரீ ருத்ராதி வேத மந்திரங்களை ஓதி வர, இன்னொரு குழு சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் ஓதி வந்தனர்.
அடியார் பெரு மக்கள் ஒரு குழு சிவ நாம கோஷம் செய்ய இன்னொரு குழு திருமுறை பாராயணம் செய்து வந்தனர்.
சர்வ வாத்ய கோஷத்தோடு ஸர்வோபசாரத்தோடு இப்படி பிரதான கும்பத்தில் பொன்னம்பலவாணர் எழுந்தருளி உலாக்கண்ட போது வேறு எங்கும் காண இயலா வழக்கமாக வீதியெங்கும் நிறை குடம் – குத்து விளக்குகள் வைத்து அன்பர்கள் வரவேற்றுப் பூசித்தனர்.
உலக அளவில் ஈழத்து சிவாச்சார்யர்களை அடையாளப்படுத்தும் பெருமை மிக்க மொடேர்ண் இந்து ஆகம நவீன கலை பண்பாட்டு நிறுவன நிறுவுனர் ஆயிரம் பிறை கண்ட அந்தணர். சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்தக்குருக்கள் மற்றும் சிவாகம கலாநிதி. முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக்குருக்கள் ஆகியோரின் தலைமையிலும் அவர்களின் குடும்பத்து சிவாச்சார்ய இளவல்கள் அனைவரதும் இணைவு மற்றும் பரிபூரண பங்கேற்பு , அர்ப்பணிப்பிலும் இக்கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது.
கோயிற் திருப்பணி செய்யும் அன்பர் குழாமின் பணி கண்டும் வியந்து வணங்கினேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட கோயிலில் துப்புரவுப் பணி போன்றவற்றை கூட “இது எங்கள் பெருமானின் வீடு” என்ற பக்தியோடு மிக பணிவோடு இயல்பாகச் செய்வது கண்டேன்.
முப்பத்து மூன்று குண்ட உத்தம பக்ஷ கும்பாபிஷேக விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவாச்சார்யர்கள், நல்லை ஆதீன முதல்வர், கலாநிதி. ஆறு திருமுருகன் உள்ளிட்ட சைவ சான்றோர்கள், அறிஞர்கள் கலந்து வழிபாடாற்றினர்.
மேற்சோன்ன கோயிற் குருக்கள் குடும்பத்தாரின் உபயமாக இம்முறை பெரும் சஹஸ்ர லிங்கம் தனிச்சந்நிதி அமைத்து பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த சஹஸ்ர லிங்கம் என்பது ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்க தரிசனத்தை தரும் அற்புத ஸ்வரூபமாகும்.
இதை விட முன்னே திருத்தேர் மண்டப நீண்டு உயர்ந்த சுவற்றில் பெரும் லிங்கம் ஓவியமாக காட்சி தருகிறது.
சுன்னாகம் என்ற நகரத்தின் பெரும் அடையாளமாகத் திகழ்வது கதிரமலை சிவன் தேவஸ்தானம் சுன்னாகம் ..
சுன்னாகம் சிவன் கோயில் என்ற இக்கோயிலை அறியாதோர் யாழ்ப்பாணத்தில் இலர்.
இப்பெருங்கோயில் கதிரமலை இராச்சியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.
இக்கோயிற் கும்பாபிஷேக விழாவில் ரக்ஷாபந்தனம் செய்து மகா யாகத்தில் இணையும் பேறும் சிறப்பாக சண்ட யாகம் செய்யும் பேறும் பெற்றேன்.
தகவல் தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
அற்புதக் கருணைப் பெரு மழை பொழிந்த பொன்னம்பலவாணன்..–நீர்வை மயூரகிரி சிவாச்சாரியார்!
Scroll to top