தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!!
எந்த மங்கலகரமான நிகழ்வாக இருந்தாலும் சூரிய வழிபாடு மிக அவசியமாகிறது! காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம்.
நமஸ்காரம்’ என்பது அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. அனைத்தும் தெய்வச் செயல் என்பதன் அடையாளம்தான் நமஸ்காரம்.
நம் கண்களுக்குப் பிரத்யட்சமாகத் தெரியும் கடவுள் சூரிய பகவான். சகல உயிர்களுக்கும் அன்னம் அளிப்பவன் சூரியன் என்பதால், சூரியபகவானுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு முறைதான் சூரிய நமஸ்காரம். பூமியின் அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியபகவானை வழிபடுவதன் மூலம், அனைத்து தேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறது வேதம். சூரிய நமஸ்காரம் நம் உடல், அறிவு, மனம் ஆகியவற்றுக்கு ஆற்றலை அளிக்கிறது.
அதிகாலை சூரிய ஒளி, நமக்கு எண்ணற்ற ஆரோக்கியப் பலன்களை அளிப்பதாக இன்றைய மருத்துவம் வியப்புடன் பரிந்துரைக் கிறது. சூரியனின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ சூரிய நமஸ்காரம் அவசியமாகிறது.சூரியனை வழிபட எளிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களால் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி, சூரியனின் அனுக்கிரகத்தை சூரியனின் கிரணங்கள் மூலமாக நாம் பெறவேண்டும்.
அனைத்து இயக்கங்களுக்கும் மூலாதாரமான சூரியனை வழிபடுவது என்பது வெறும் சடங்கு அல்ல. அது, நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லதொரு மார்க்கம்; எந்தச் செலவுமின்றி நாம் ஆரோக்கியம் பெறுவதற்கானச் சிறப்பு வழி.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல்லுவர். அதாவது கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.
ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் குடும்ப நன்மைகள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!!