தேங்காய் உடைத்து நிவேதனம் பண்ணல் , குத்து விளக்கு ஏற்றல், அதன் அர்த்தங்கள்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எந்த வழிபாடு செய்யும் போதும் ஆலய வழிபாடுகள் திருமணங்கள் போன்ற விடயங்கள் என்று எதை எடுத்தாலும் தேங்காய் உடைத்து நிவேதனம் செய்தல், நைவேத்தியம் செய்தல், போன்ற முறைகள் கட்டாயம் இருக்கும். அவற்றின் தத்துவங்களைப் பார்ப்போம்!!!
பூஜை, வழிபாடு என்ற வந்தாலே நிவேதனம் செய்து, குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, தூப தீபம் காண்பித்து வழிபடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம். அதனைப் பற்றிய குறிப்புகளை இந்தப் பதிவிற் காண்போம்!
குத்துவிளக்கு மகிமை:
குத்துவிளக்கில் ஐந்து முகங்கள் உண்டு. இவை பெண்களுக்கு இருக்க வேண்டிய அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களை குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் திருமணம் ஆகும் பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தில் குத்துவிளக்கு முதலிடம் பெறுகிறது.
இறைவனுக்கு தேங்காய் உடைத்து நிவேதனம் செய்கிறோம். தேங்காயிலுள்ள நார்கள், ஓடு, ஓட்டில் மூன்று கண்கள், ஓட்டினில் தூய தேங்காய், உடைத்த பின் அதன் வெள்ளைப் பகுதி , சுவையான நீர் ஆகியன உள்ளன. தேங்காயில் உள்ள நார்கள் மனிதர்கள் செய்யும் குற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. ஆனபடியினாலத்தான் தேங்காய் மீது உள்ள நார் தும்புகளை அகற்றுகிறோம் !!!
ஆணவம், கன்மம், மாயை அருகிய மும்மலங்கலால் குற்றங்கள் செய்கிறார்கள். இம் மும்மலங்களை உணர்த்துவது தேங்காய் ஓட்டில் காணப்படும் மூன்று கண்கள் ஆகும்.
மும்மலங்களை நீக்கினால் உள்ளம் உடைத்த தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதி போல வெள்ளை உள்ளமாக மாறும். வஞ்சகம் சூது வாது இல்லாத மனமாக , அந்த வெள்ளை உள்ளம் சுவையான நீர் போன்ற இறைவனின் பேரின்பத்தை அனுபவிக்கும்.
அர்ச்சனை என்பது, தினமும் ஆலயங்களில் அர்ச்சகர்களால் செய்யப்படும் பூஜைகள்தான் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சம்ஸ்கிருத மொழியில், ‘அர்ச்’ என்றால் வழிபடுதல் என்று பொருள்.
அர்ச்சகர்கள் செய்யும் பூஜைகள், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர் களுக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகின்றன. உலக நன்மைக்காக அவர்கள் செய்யும் பூஜை, எல்லோருக்கும் சகல பலன்களையும் தரும்.
தேங்காய் அரிய பல மகத்துவங்களைக் கொண்டது. எல்லாம்வல்ல இறைவனுக்கு அதை நிவேதனமாக அளிப்பது விசேஷம். தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையை நாம் பார்க்கும்போது, அறியாமை எனும் இருள் அகன்று, ‘சச்சிதானந்த ரூபமான பரம்பொருளுக்குப் பிடித்தது தூய்மையே’ என்ற உணர்வு மேலோங்கும். விளைவு, நமது உள்ளத்தில் தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் மலரும்.
கர்மவினைகளால் சூழப்பட்ட ஆத்மாவின் நிலையைத் தேங்காயின் வெளிப் பாகம் குறிக்கும். கடவுளின் சந்நிதியில் கர்ம வினை களின் தாக்கங்கள் விலக்கப்பட்டு ஆத்மா தூய்மை அடையும். இதையே தேங்காய் சமர்ப்பணம் நமக்கு உணர்த்துகிறது.
கற்பூரம் காட்டுவதன் உட்பொருள்:
வெள்ளையான கற்பூரமானது நெருப்புப் பற்றியதும் தன் வடிவை இழந்து வானில் கலந்துவிடுகிறது. அதுபோல ஆன்மாவானது தான் குடிகொண்டுள்ள உடம்பை விட்டு நீங்கி கடவுளுடன் கலந்து பேரின்ப பெருவாழ்வு அடைய வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குவதே கற்பூரம் ஏற்றுதல் ஆகும்.
நைவேத்தியம்:
இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது என்பது நன்றி தெரிவிக்கும் ஒரு பக்தி முறைதான். எனக்கு இதையெல்லாம் தந்திருக்கிறாயே இறைவா உனக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீ கொடுத்தவற்றில் ஒரு சிறிதளவு இதோ இங்கே உனக்கு அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள் என்று அறிவிக்கிறோம். கண்மூடி மனதார தியானிக்கிறோம். கண் திறந்த பிறகு இறைவன் நம் படையல்களை ஏற்றுக் கொண்டதாகிய நிறைவு நமக்கு ஏற்படுகிறது. ஆதலால் அந்த பிரசாதத்தை நாம் உட்கொள்கிறோம்.
இறைவனுக்கு இப்படி அர்ப்பணிக்க வேண்டிய அவசியம் இல்லைதான். அதை இறைவனும் எதிர்பார்ப் பதில்லைதான். என்றாலும், தான் தன் பக்தனுக்கு கொடுத்த உணவில் அவனுடைய கவனக்குறைவால் ஏதேனும் தீயென கலந்திருக்குமோ என்ற அக்கறையுடன், தனக்கு படைக்கப்படும் உணவிலிருந்து அந்த தீயனவற்றை தான் ஏற்றுக்கொள்கிறான் இறைவன். அதுதான் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுவதன் தாத்பரியம். அதுதான் இறைவனின் கருணை.
இவ்வளவு தத்துவமும், தாத்பரியமும் உள்ளடங்கியதே நம் பூஜை முறை. ஆதலால் இவற்றின் அர்த்தங்களை புரிந்துகொண்டு, சரியானபடி பூஜை செய்து, தெய்வ அருளை பெறுவோமாக! இந்த ஆன்மீக தத்துவங்களை, வழிமுறைகளை வளரும் பிள்ளைகளுக்கு இந்த தத்துவங்களை சொல்லிக் கொடுத்து வளர்ப்போம்!!!
ஆன்மீக இதழ் ஒன்றில்இருந்து :
தொகுப்பு : சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
தேங்காய் உடைத்து நிவேதனம் பண்ணல் , குத்து விளக்கு ஏற்றல், அதன் அர்த்தங்கள்!!!
Scroll to top