தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்!
`புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்’ என்கிறது திருமந்திரம். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இப்பிறப்பில் இறைவனைப் பூக்களால் பூசிக்கும் பேறு கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். கைகளைப் பெற்றிருப்பது பூக்கள் தூவி இறையை வழிபடுவதற்காகவே என்பது திருநாவுக்கரசரின் வழிகாட்டல். `கைகாள் கூப்பித் தொழீர் கடிமா மலர்தூவி நின்று’ எனப் பாடுகிறார் அப்பர்.
ஆம்! சிவ வழிபாட்டில் பூ வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. புஷ்பாஞ்சலி, மலர்ப் பந்தல், பூவட்டக்குடை, புஷ்பக வாகனம், புஷ்பப் பாவாடை, புஷ்பபோதகம் என பல வழிபாடுகள் பூக்களைக் கொண்டு நடைபெறுகின்றன. அனைத்து மலர்களுமே சிவ வழிபாட்டுக்கு உரியன என்றாலும், குறிப்பிட்ட சில மலர்களைச் சூட்டி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களைச் சொல்லி வழிகாட்டியுள்ளனர் ஆன்றோர்கள்.
அவ்வகையில் வழிபாட்டில் மலர்களின் மகிமைகள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
தாமரை மலர்கள் , வில்வ இலை,
வெள்ளாம்பல் மலர், துளசி,
செங்கழுநீர்ப் பூக்களும் விளா இலைகள்,
கயலாந்தங்கரை ,மாதுளை ,குவளை மலர்கள் மற்றும் நாயுருவி இலைகள் ,
வெண் தாமரை, கொண்டும் நாவல் இலைகள், நீலோற்பலமும் விஷ்ணு கிரந்தி இலைகளும் சிவ வழிபாட்டில் மிக உகந்தவை!
மேலும் அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை, மல்லிகை, காட்டு மல்லி, மர மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மருக்கொழுந்து ஆகிய மலர்களும் சிவ வழிபாட்டுக்கு மிக மிக சிறப்பானவை!!!
இந்த மலர்களில் ஒரு தடவையில் எட்டு விதமான மலர்களினால் அர்ச்சித்து மலர் வழிபாடு செய்யலாம்! அதை எண்மலர் வழிபாடு என்று ஆன்மீக ஞான நூல்கள் சொல்கின்றன!
சிவ வழிபாட்டில் அஷ்டபுஷ்பம் சாத்துதல் எனும் மரபு உண்டு. எட்டு வகைப் பூக்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதையே இவ்வாறு கூறுவர். சிவ பூஜா நூல்கள் எண் மலர்களைப் பலவிதமாக பட்டியலிடுகின்றன. தேவாரப் பாடல்களிலும் எட்டு பூக்கள் குறித்தத் தகவல்கள் உண்டு.
`தடமலர் எட்டினால் பாரித்தேத்தவல்லார் வினை மாற்றுவார்’ எனப் பாடுகிறார் அப்பர் பெருமான். அதாவது, எட்டு மலர்களைச் சாத்தி சிவபெருமானை வழிபடுவதால் பண்டைய வினைகள் நீங்கும் என்கிறார் அவர். சுந்தர மூர்த்தி சுவாமிகளும் எட்டு பூக்கள் குறித்து பாடியுள்ளார். `எண்ணார் நாண் மலர் கொண்டங்கு இசைந்தேத்தும் அடியவர்கள்’ என்கிறார் அவர். எண் வகைப் பூக்களை நாண் மலர் என்றும் சில இடங்களில் குறிப்பிடுகின்றனர்.
சாமானியர்கள் இங்ஙனம் எண்வகை மலர்களால் பூஜிக்கவேண்டும் என்றால், ஞானியரும் மகான்களும் வேறுவிதமான எட்டு பூக்களால் பூஜிப்பார்கள் என்கின்றன ஞானநூல்கள். அதாவது தங்களின் மனம் எனும் செடியில் பூக்கும் எட்டு மலர்களைக் கொண்டு மகேசனைப் பூஜிக்கிறார்களாம்.
கொல்லாமை, ஐம்பொறிகளை அடக்குதல், அமைதித்தன்மை, அருள் உடைமை, அறிவுடைமை, தவம், வாய்மை, நன்னடத்தை ஆகியவையே மகான்கள் போற்றும் எட்டு பூக்கள் ஆகும்.
இதன் மூலம் இவ்வுலக வாழ்வில் நாம் நினைத்தவை நடக்கும்; நிறைவில் சிவனடியைச் சேரும் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அவ்வகையில் கீழ்க்காணும்படி சொல்லி பூஜித்து வழிபடலாம்.
ஓம் சர்வாய தேவாய நம:
ஓம் பவாய தேவாய நம:
ஓம் ருத்ராய தேவாய நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் பசுபதே தேவாய நம:
ஓம் ஈசானஸ்ய தேவாய நம:
ஓம் மஹதேர் தேவாய நம:
பூக்கள் இல்லையா என்ன செய்யலாம்? வழிபாடாமல் இருக்க முடியுமா??
தமிழில் பூஜை பண்ண வேண்டும் அடிக்கடி சிலர் குரல் எழுப்புவார்கள்! மாற்றுக்கருத்தில்லை. பல ஆலயங்களில் தமிழில் வழிபாடுகள் சமஸ்கிருத மந்திரங்களுடன் இன்றும் நடைபெறுகின்றன!
மலர்கள் கிடைக்கவில்லை என்றால் சொற்பூக்களால் இறைவனை மனதார வழிபடலாம். அது என்ன சொற்பூக்கள் ??? தேவார திருவாசகம்தான் பெரியோர்கள் சொன்னசொற்பூக்கள்!!! எத்தனை பேர் இதனை செய்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு சொற்பூக்களால் வழி படலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்?
ஒப்பிடுகையில் மிக மிக சிறு தொகையினர்தான் இவற்றை செய்கிறார்கள். இந்த தேவார – திருவாசகப் பாடல்களைச் சொல் மலர் மாலை என்று சிறப்பிப்பார்கள் ஆன்றோர்கள்.
ஆக, வெளியூரில் இருக்கும் தருணம், பயணத்தில் உள்ள காலம் என மலர்களைச் சேகரிக்க முடியாத சூழலில், அற்புதமான பதிகங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாடி, அவற் றையே மலர்களாக மனத்தால் பாவித்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபடலாம். நன்மையும் கிடைக்கும். இறைவன் அருளும் கிடைக்கும் நண்பர்களே!!!
ஆன்மீக இதழ் ஒன்றில்இருந்து:
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்!