கார்த்திகை சோமவாரம் – திங்கட்கிழமை

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.

·
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

கார்த்திகை அண்மிக்கிறது! ஆன்மீக நண்பர்களுக்கு கார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகைத் திங்கள் -சோமவாரம் ஞாபகத்துக்கு வரும்!
கார்த்திகை மாதத்தில் முக்கியமான விரதங்களில் கார்த்திகை மாத சோமவாரம் விரதம் சிறப்பான விரதமாகும்.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். சந்திரனுக்கு சோமன் என்ற ஒரு பெயர் உண்டு. இதை முதன் முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் வாழ்வில் சுபிட்சங்கள் நிறைந்திடவும், நம்மைச் சூழ்ந்திருக்கும் கஷ்டங்கள் மற்றும் கவலைகளிலிருந்து மீளவும் இறையருள் அவசியம். ஆம்!

விதிப்படி வாழ்வில் தடைகளும் சிரமங்களும் வரும்போதெல்லாம் நாம் சோர்ந்துவிடாமல், தடைகளையே படிக் கட்டுகளாக்கி முன்னேறும் வல்லமையை நமக்குத் தருபவை இறை வழிபாடுகள்தான்.
எனவேதான் நம் முன்னோர் மகிமை பொருந்திய நாள்களைக் குறித்து, அவற்றில் உரிய இறைவழிபாட்டை மேற்கொள்ளச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார்கள். அவ்வகையில் ஞானநூல்கள் போற்றும் வழிபாடுகளில் சிறப்பானது சோமவார பூஜை.

தட்சனின் சாபத்தால் தேய்ந்துவந்த சந்திரன், தன் வாட்டம் நீங்கிட சிவபெருமானை தவமிருந்து வழிபட்டான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் சோமன் மீண்டும் வளர்ந்து பொலிவு பெற அருள்செய்தார். அத்துடன் சந்திரனுக்கு ஏற்றம் தரும் வகையில், சந்திரனை தன் தலையில் சூடி பிறைசூடிய பெருமான் ஆனார்.
கார்த்திகை மாதம் வரும் சோமவாரம் அதாவது திங்கள் கிழமைகளில் சகல சிவாலயாங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கார்த்திகை மாதம் மட்டுமல்ல எல்லா மாதங்களிலும் சோம வாரமாகிய திங்கள் கிழமையில் சிவபெருமானை வழிபடுவதால் சகல நலன்களும் கைகூடும். மனோகாரகனாகிய சந்திரனின் பூரண அருளும் கிடைக்கும். அதனால் நம் மனக்கவலைகள் நீங்கி வாழ்க்கைச் செழிக்கும்.
நாமும் கார்த்திகை மாத சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து பார்வதி சமேத சிவபெருமானின் அருளைப் பெறுவோமாக.

தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com

கார்த்திகை சோமவாரம் – திங்கட்கிழமை
Scroll to top