தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
சபரி மலைக்கு செல்லும்போது நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்வது வழக்கம். ஏன் அப்படி நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்லப் படுகிறது நண்பர்களே?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் தனியாக நெய் கொண்டு செல்வதோ அல்லது தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயை தான் அபிஷேகத்திற்கு வழங்குவார்கள்.
நெய் தேங்காய்
முக்கண் கொண்ட தேங்காய் சிவனை குறிப்பதாகும். பசு நெய் கோபாலனாகிய மகாவிஷ்ணுவை நினைவுப்படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.
நெய் எதற்காக?
ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?
பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். மேலும் அரசவை வைத்தியரை, புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் எனக் கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டுவரக் காடு நோக்கிப் புறப்பட்டான் ஐயப்பன்.
தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். அதேசமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.
அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இருமுடியைத் தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.
இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கான காரணம்:
தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும், தன்னைத் தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் ஐயப்பன் கூறினார். பந்தள மன்னன், மணிகண்டா! நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். நாங்கள் உன்னைக் காண வேண்டும் என்றால் மலைகளைக் கடந்து வரவேண்டும். வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.
அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் மலைக்குச் செல்வார். மகனை காண செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய் இலகுவில் கெட்டுப் போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார்.
மேலும், நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக்கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதன்மூலம் இருமுடிகட்டில் நெய் தேங்காய் முக்கியமான ஒன்றாகிவிட்டது.