அறுகம்புல்லை `பிள்ளையார் புல்’ என்றே அழைப்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு அறுகம்புல் விநாயகர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களைத் தாக்கித் துன்புறுத்திவந்தான். தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் விஸ்வரூபமெடுத்து அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார். விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற பிறகும் அனலைக் கக்கினான் அனலாசுரன். கங்கை நீரால் அபிஷேகம்செய்தும் விநாயகரின் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. அப்போது, முனிவர் ஒருவர் அறுகம்புல்லைக் கொண்டுவந்து விநாயகரின் தலையில் வைத்தார். அத்தோடு இல்லாமல் அறுகம்புல் சாற்றையும் பருகக் கொடுத்தார். அனலாசுரனும் குளிர்ந்து இறந்து போனான். விநாயகரின் வயிற்றெரிச்சலும் அடங்கியது. அன்றிலிருந்து அறுகம்புல் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடம்பிடித்தது. மிக எளிதில் கிடைக்கும் இந்த அறுகம்புல்லின் சிறப்புகள் எண்ணிலடங்காதன. சித்தமருத்துவர்கள் இதன் பெருமைகளைப் போற்றிப்புகழ்கிறார்கள். அவற்றில் சில…
* அறுகம்புல் குளிர்ச்சித் தன்மை வாய்ந்தது. இது உடல் வெம்மையைப் போக்கும்.
* அறுகம்புல் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களைப் போக்கி சுத்தமாக்கும்.
* ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அறுகம்புல் சாறு சீராக்குகிறது.
* அறுகம்புல் சாற்றைப் பருகுவதால் ஞாபக சக்தி பெருகும்.