தெரிந்து கொள்வோம் நண்பர்களே :-
எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது?
‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்! தையில் அறுவடை செய்யவேண்டும் என்றால், ஆடியில் விதைக்க வேண்டும். பொதுவாகவே ஆடி என்பது மழைக்காலத்தின் துவக்கம். நல்ல விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள் இந்தப் பருவத்தில் விதை விதைப்பார்கள். இந்த விதைதான் தையில் அறுவடைக்குத் தயாராகிறது. எனவே, நற்பலனை எதிர்பார்க்கும் எவரும் நற்காரியங்களில் ஈடுபட உகந்த மாதமாக ஆடி விளங்குகிறது.
ஆடி மாதம் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்பார்கள். அதன் உள்ளர்த்தத்தை நாம் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.
உலகியல் வாழ்க்கைக்காக உழைக்கும் மக்கள், தம் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகோலும் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒதுக்கும் நேரம் எப்போதும் குறைவாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடிவேல், ஆடி அமாவாசை என்று, ஆன்மீகப் பயணத்துக்கு உகந்த பல திருநாட்கள் இருக்கின்றன.
பணத்தின் பின்னாலேயே ஓடும் நம்மை சற்று இழுத்துப் பிடித்து நிறுத்தி, கொஞ்சம் ஆன்மீக வாசனையையும் ஊட்டுவதற்காகவே ஆடியில் எந்தவொன்றையும் ஆரம்பிப்பதில்லை.
ஆனால், இந்த ஒரு மாதமும் நாம் ஆன்மீகத்தின் பால் காட்டும் நாட்டம், தொடரும் நமது தேடல் பயணத்துக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, அறம், பொருள், இன்பம், வீடு பேற்றைத் தேடும் நம் அனைவரது பயணத்துக்கும் ஆடிப் பிறப்பு நல்லதொரு ஆரம்பம் தரும்!