தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே இன்று ஒரு முக்கியமான மருத்துவக் குறிப்பு ஒன்றை பார்ப்போம்.
உலகத்தில் பலருக்கு சிறுநீரகப் பிரச்சினையால் ”டயாலிசிஸ்” என்று ஒரு மருத்துவம் செய்வார்கள்.
உண்ட உணவு உடலிலேயே தங்கிவிட்டால் அது விஷம்’ என்பதுண்டு. உடலின் சுத்திகரிப்பு வேலையைத் திறம்படச் செய்வது சிறுநீரகம். அந்தச் சிறுநீரகம் பழுதடைந்தால் பதற்றம் தொடங்கிவிடும். மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறவர்களுக்குப் போதுமான அளவு கொடையாளர்களும் இல்லை. அதனால் பலர் டயாலிசிஸ் சிகிச்சையில்தான் வாழ்நாளை நீட்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
டயாலிசிஸ் என்பது குறுகியகால சிகிச்சை மட்டுமே. இது நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. இதைச் சரிசெய்யவே, உலகின் முதல் செயற்கை சிறுநீரகம் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ரத்த ஓட்டத்திலிருந்து கழிவுகளை வடிகட்டுவதற்காக மனித இதயத்தின் துணையுடன் இயங்கும் சிறப்பு மைக்ரோசிப்களின் கூட்டாகும்.
வான்டர்பில்ட்டிலிருந்து வில்லியம் ஃபிஸல், கலிஃபோர்னியாவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷுவா ராய் ஆகியோர் இந்தச் செயற்கை சிறுநீரகத் திட்டத்தைத் தொடங்கினர். இந்தச் செயற்கை சிறுநீரகம் நம்பகமான முறையில் உடலில் கழிவுகளை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி குறித்த தன் கட்டுரையில் ஃபிஸல், விளக்கி யுள்ளார்.
ஆய்வாளர்கள் இந்தச் சாதனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர். ரத்த உறைதல் ஏற்படாமல் இருக்கிறதா, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா, எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்துவருகின்றனர்.
மனிதச் சோதனைகள் மூலம் பெறப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளும் சாதகமாக இருப்பதால், இந்த முயற்சி வெற்றியடைந்தால் டயாலிசிஸ் தேவையே இனி இருக்காது!
நன்றி – மருத்துவ இதழ் ஒன்றில் இருந்து.