தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பொதுவாக நாம் புரட்டாதி மாதத்தில் நவராத்திரி வழிபாடுகள் அம்பிகையை நோக்கி வழிபடுவோம். இன்று பல இடங்களில் வசந்த நவராத்திரி என்ற ஓர் வழிபாடு அம்பிகையை வேண்டி வழிபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியவை தான். பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.
அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள். வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.
சக்தி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இருபற்களாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும். அந்த இரு பற்களிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம். வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக்கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். இந்த கால கட்டத்தில் நாம் வசந்த நவராத்திரியாக , எல்லாம் வல்ல அம்பிகையை வழிபட்டு பயன் பெறுவோம்.