நவக்கிரக வழிபாடு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

வழிபாடுகளில் நவக்கிரக வழிபாடும் மிக முக்கியமானதாகிறது நண்பர்களே!

ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக, மந்திரிகளையும், அதிகாரிகளையும் நியமித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார். அதேபோல்தான், எல்லாம்வல்ல இறைவன், நம்முடைய முன்வினைகளுக்கு ஏற்ப நம்மைச் சுக-துக்கங்களை அனுபவிக்கவைத்து, வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதுவாக நவ கிரகங்களைப் படைத்திருக்கிறார்.

ஒரு தாய், தன் குழந்தைக்கு உடல் நலம் குன்றினால், கஷாயம் போன்ற மருந்துகளைக் கொடுத்து, குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படச் செய்கிறாள். அதேபோல், நமக்குப் பலவித போகங்களை அளித்து, இந்தப் பிறவியி லேயே நம்முடைய கர்மபலனை அனுபவிக்கச் செய்கிறார் இறைவன். இதை விடவும் நம்முடைய வளர்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்?

ஒரு மனிதன் எப்போது இந்தப் பூமியில் பிறக்கிறாரோ, அப்போது இருக்கும் நட்சத்திரத் துடன் அவர் சம்பந்தப்பட்டுவிடுகிறார். சூரியன் நாயகராக விளங்கி, மற்ற கிரகங்களுடன் இணைந்து அளிக்கக்கூடிய பலாபலன்களை, அந்த ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டும்.

நம் பூர்வ ஜன்ம வினைப்பயனாக நாம் அனுபவிக்கக் கூடிய பலாபலன்கள், நமக்குக் கஷ்டத்தைத் தருவதாக இருந்தால், அந்தக் கஷ்டத்திலிருந்து நாம் ஓரளவு நிவாரணம் பெறவே நவகிரகங்களை வழிபடுவ துடன், நவகிரக ப்ரீதியும் செய்துகொள்கிறோம்.

கொட்டும் மழையைத் தடுத்து நிறுத்துவது இயலாது. ஆனால், மழையில் நனையாமல் நம்மைக் காத்துக்கொள்ள குடை போன்ற சாதனங்கள் உதவுவதுபோல், நவகிரக வழிபாடுகள் நமக்கு உதவிசெய்யும். அவ்வாறு, நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள அவர்களை வழிபடுவதுடன் நின்றுவிடாமல், நல்லொழுக்கத்துடன் வாழவும் முயற்சி செய்ய வேண்டும். இறைவனிடமும் பரிபூரணச் சரணாகதி அடைந்துவிடவேண்டும்.

நவகிரக வழிபாடுகள் உயர்ந்த தத்துவங்களைக் கொண்டிருப்பதுடன், நமக்குப் பயன் தரும் வகையிலும் அமைந்திருப்பதை, நாம் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறோம். ஆகவே, நவகிரகங்களுக்குச் செய்யக்கூடிய பிராயச்சித்த கர்மாக்களும், இறைவனால் அளிக்கப்பட்டவையே என்று அறிந்து அவற்றை உரிய முறைப்படி செய்து வர வேண்டும்.

நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.

தகவல் சேகரிப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

Image may contain: one or more people and plant
நவக்கிரக வழிபாடு.
Scroll to top