தெரிந்து கொள்வோம் நண்பர்களே, துவார பாலகர்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு நாம் துவார பாலகர்களை வணங்கி பின் மற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம்.

இப்போது இந்த துவார பாலகர்களைப் பற்றி அறிவோம்!

சிவன் கோயில், பெருமாள் கோயில், அம்பாள் கோயில்களின் முகப்பில் துவார பாலகர்கள் வீற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆலயத்தின் உள்ளே பிரவேசிப்பதற்கு முன்பாக, துவார பாலகர்களை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

சிவன், பெருமாள் கோயில்களில் துவார பாலகர்கள் என்றும் அம்மன் கோயில்களின் முகப்பில் இருப்பவர்களை துவார பாலகிகள் என்றும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

சிவன் கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களின் பெயர் சண்டன், பிரசண்டன். மாகா விஷ்ணுவின் ஆலயங்களில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்கள் ஜயன், விஜயன். இவர்கள் ஒரு சாபத்தினால் மூன்று ஜென்மங்கள் அசுரர்களாகவே பிறந்தவர்கள். அதன் பின் துவார பாலகர்களாக திருமாலுக்குச் சேவை செய்துவருபவர்கள். அம்மன் கோயிலின் வாயிலில் காக்கும் துவார பாலகிகளின் பெயர், ஹரபத்ரா, சுபத்ரா.

கோயிலின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்களின் சிலை இரண்டு விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒன்று, சங்கு, சக்கர, கதாயுதத்துடன் ஆயுத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.

இன்னொன்று, நிராயுதபாணியாக, தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவார பாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.

இன்னொரு பாலகர், தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனைத் தவிர வேறெதுவுமில்லை என்பதே இதன் தத்துவம்.

எப்படி ஒரு சி.சி.டி. கேமரா மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப்படுகின்றனவோ, அதேபோன்று ஆலயத்தில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப் படுகின்றன.

எப்படி கடவுச்சொல்லைப் பயன்படுத் தினால்தான் வங்கி ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுக்க முடியுமோ, அப்படியே துவார பாலகர் களை வழிபட்டு, அவர்களின் அனுமதி எனும் கடவுச்சீட்டைப் பெற்ற பிறகே கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை நாம் வழிபட வேண்டும். இதுவே ஆகமங்கள் கூறும் வழிபாட்டு முறை.

கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் ஆலயம்.

தகவல் சேகரித்தவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

 
தெரிந்து கொள்வோம் நண்பர்களே, துவார பாலகர்கள்.
Scroll to top