முன்னேஸ்வரம் – இலங்கை

முன்னேஸ்வரம் – இலங்கை

Pictureஇத்தலம் கொழும்புவிலிருந்து 82 கி.மீ தொலைவில் உள்ளது. கொழும்புவிலிருந்து வடக்கே A3 நெடுஞ்சாலையில் சிலாபம் (Chilaw) சென்று , கிழக்கில் திரும்பி 7 கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம். புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. சிலாபத்தில் இருந்து இங்கு செல்ல நகரப்பேருந்து உள்ளது.

தலச்சிறப்பு

இலங்கையில் சிறப்புப் பெற்ற சிவன்கோயில் ஐந்து. அவை ,முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவை. இவற்றில் முன்னதாகப் போற்றக்கூடியதாக முன்னேஸ்வரம் இருக்கிறது.

புராணவரலாறு:
இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் முற்பட்ட, தொன்மைமிக்க சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது, இந்த முன்னேசுவரம் திருக்கோயில். பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது.

முன்னேசுவரம் குபேரன், இராவணன் இராமபிரான் ஆகியோரால் வழிபடப்பட்டதாய் வரலாறு சொல்கிறது. எனவே கி.மு. 4400 ஆண்டுகட்கு முற்பட்டதாகவே இந்தக் கோயில் இருக்க வேண்டும். இராம, இராவண யுத்தத்தோடு முன்னேஸ்வரம் தொடர்புபட்டுள்ளது. இலங்கை வரலாற்றிலும் முன்னேஸ்வரம் சொல்லப்பட்டுள்ளது

ஆதியில் மாயவனாறு என்றழைக்கப்பட்ட இந்த ஆறு, தற்காலத்தில் அரசினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தெதுறு ஓயா என வழங்கப்பட்டு வருகின்றது. முன்னைநாதர் மாயவனாற்றில் தீர்த்துமாடும் நிகழ்வோடு புராணக் கதையொன்றும் தொடர்புட்டுள்ளது. மகாவிஷ்ணுவே மாயவன் என அழைக்கப்படுகின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் மகாவிஷ்ணு சிவனிடம், ‘நான் மோகினி ரூபம் எடுத்தபோது என்னைச் சேர்ந்து ஐயனார் உதயமானார். இவ்விடத்தில் நான் ஆறாக ஓடிக்கொண்டிருப்பேன். இங்கு வருடா வருடம் வந்து என்னைச் சேரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் என்று கூறப்படுகின்றது. சிவவிஷ்ணு ஐக்கியத்தின் தத்துவம் வேறாகக் காணப்பட்டபோதிலும், சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மேலோட்டமான புராணக் கதையாக மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே மாயவனாற்றில் தீர்த்தம் நடைபெறுவதாகவும் ஒரு ஐதீகம் காணப்படுகின்றது. தீர்த்தக்கரையின் பெயர் ஐயனார் கோவிலடி என அழைக்கப்படுகின்றது. இவ்விடத்தில் சிறு ஐயனார் கோவிலும் உண்டு.

ஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள் காலத்தில் நிகழ்ந்த கோடி அர்ச்சனை சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 1962 ஆம் ஆண்டிலே எட்டுக்கிரகங்களும் ஓரிடத்தில் சேரும்போது பல அனர்த்தங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ‘பிரார்த்தனை மூலம் உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும்’ என்பதை நிரூபிக்க, கோடி அர்ச்சனையைச் செய்து முடித்தார். ஒரு நாளைக்கு இலட்ச அர்ச்சனை வீதம் நூறு நாளைக்கு நூறு இலட்சம் அர்ச்சனையைச் செய்து, ஒரு கோடி அர்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டது, இவ்வாறான கோடி அர்ச்சனை செய்வதால் என்ன பயன் என்ற கேள்வி பலர் உள்ளத்தில் எழுந்தபோது, ‘எமது நாடு எத்தனையோ இடர்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த இடர்களிலிருந்து காப்பாற்ற இந்தக் கோடி அர்ச்சனை உதவும்’ என ஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள் பதில் அளித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு பாலசுப்ரமணியக்குருக்கள் இறைபதம் அடைய, இவரது மருகரான பிரமஸ்ரீ கா. இரத்தின கைலாசநாதக்குருக்கள் முன்னேசுவரத்தின் தர்மகர்த்தா பொறுப்பையும் பிரதம் குருத்துவப் பொறுப்பையும் ஏற்றார். ஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்களால் ஏற்படுத்தப்பட்ட மரபுகளை நியமம் தவறாது கடைப்பிடித்து ஆலய நித்திய, நைமித்திக வழிபாடுகள் சிறப்புற வகை செய்தார். தற்பொழுது இவரது இரண்டாவது மகனாகிய பிரமஸ்ரீ இ. சதானந்த கார்த்திகேயக் குருக்கள் ஆலய தர்மகர்த்தாவாகவும், பிரதமகுருவாகவும் செயற்பட்டு வருகின்றார்.

பிரமஸ்ரீ கா. இரத்தினகைலாசநாதக் குருக்களுடைய சகோதரராகிய பேராசிரியர் கா. கைலாசநாதக்குருக்கள் சிறந்த கல்விமான். இவர் இந்தியா சென்றவேளையில் அங்கிருந்து பத்ததிகள் (ஆகமக்கிரியைகளுக்கு வழிகாட்டும் நூல்) பலவற்றைக் கொண்டுவந்து, யாகசாலை அமைத்து, பத்துக் குண்டங்கள் வைத்து, 700 சுலோகம் கொண்ட சப்தசதி மந்திரங்களால் ஜபமும், சதசண்டிஹோமம் செய்து, வசந்தநவராத்திரியை ஆரம்பித்து வைத்தார். இவரே இதனைப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதன் பின்னர் இவ் ஆலயம் சக்திமிகக் கொண்ட தலமாக விளங்கிற்றென்பர்.

இவ்வாலயச் சூழல் தேவாரத் திருப்பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சீதப்புனல் வயல்சூழ்’ என்ற வரிகளுக்கேற்பக் காணப்படுகின்றது. இக்கோயிலைச்சுற்;றிப் பல பாரிய குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களோடு சேர்ந்து கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்ட வயல்களும் காணப்படுகின்றன. தித்தக்கடக்குளமும் தித்தக்கரைவயலும், நல்லநாதன் குளமும் நல்லநாதன் வயலும், முன்னேசுவரம் குளமும் முன்னேசுவரம் வயலும், பாலாக்குளமும் பாலாக்குள வயலும், திமிலக்குளமும் திமிலக்குள வயலுமென இவ்வாலயத்தைச் சுற்றி இம்மானியங்கள் அமைந்துள்ளன. தீர்த்தக்கரை என்னும் பெயரே மருவித் தற்காலத்தில் தித்தக்கட என அழைக்கப்படுகின்றது, இக்குளங்களில் தாமரை, அல்லி, நீலோற்பலம் ஆகிய பூக்கள் விளைந்து காணப்படும். இப்பூக்களால் சிவனையும், அம்பாளையும் முழுதாக மூடி அர்ச்சனை நடைபெறும். ஐயாயிரம் தாமரை மலர்களால் ஐந்து அர்ச்சகர்கள் சிவலிங்கப்பெருமானை பூச்சொரிந்து அர்ச்சிப்பர். அவ்வாறே வடிவழகி அம்பாளையும் ஐயாயிரம் நீலோற்பவமலரால் அம்பாளின் திருவுருவம் மலருக்குள் மறையுமாறு அர்ச்சிப்பர்.

இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் இருபத்தியெட்டுக் கிராமங்கைள இக் கோயிலுக்குச் சாதனப்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கோயிலுக்குரிய மானிய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. சில குளங்களையும், வயல்களையும் மட்டும் ஆலயத்திற்கென விட்டுவிட்டு ஏனையவற்றை ஆங்கில அரசு சுவீகரித்துக்கொண்டது. மன்னர்களால் ஆலயத்திற்கெனக் கொடுக்கப்பட்ட மானியங்கள் எழுதப்பட்ட செப்புச்சாசனம், கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் அதனை ஆங்கிலேயர் இந்தியாவிற்கு எடுத்துச் சென்றனர். தற்பொழுது இச்சாசனம் எங்குள்ளசென்று தெரியாத நிலையில் மறைந்துள்ளது.

கோயிலுக்குரிய தோட்ட நிலங்களிலே, தென்னை வளர்க்கப்பட்டுத் தற்காலத்திலும் இவை பராமரிக்கப்படுகின்றது. இவை தவிர வேறு பல சிறிய வயல்களும், தோட்டங்களும் கோயிலுக்குரிய மானியமாகக் காணப்படுகின்றன. மல்வத்தை என அழைக்கப்படும் கிராமம், கோயிலுக்குரிய மலர்களை வளர்க்கும் இடமாகக் காணப்பட்டது. பூந்தோட்டம் என்பதனையே சிங்கள மொழியில் மல்வத்தை என்றழைப்பர். ஆங்கிலேயர் ஆட்சியின் பின் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம பெற்றது. இலங்கையரிடமிருந்த மேலதிகச் சொத்துக்களை இலங்கையரசு சுவீகரித்தது. அவ்வேளையில் முன்னேசுவரம் ஆலயத்திற்கு மானியமாகக் காணப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் எதவும் சுவீகரிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தின் அடிப்படையில் எல்லா மதத்தைச் சார்ந்தோரையும் வரவேற்கும் மரபு இக்கோயிலுக்குரிய மரபாகக் காணப்படுகின்றது. ஆதியிலிருந்து இன்றுவரை அம்மரபு பின்பற்றப்பட்டு வருகின்றது. திருவிழா நடைபெற்று, சுவாமி வீதி வலம் வந்தபின் பெரியபூசை நடைபெறும். முதல்வீதி, இரண்டாம் மூன்றாம் வீதிகளைச் சுவாமி சுற்றியபின், உள்ளே வந்தததும் வைரவபூசைக்கு முன் ஆஸ்தான மண்டபத்திலுள்ள சோமாஸ்கந்தருக்கும், வடிவழகி அம்மையாருக்கும் தீபாராதனை நடைபெறும். உபயகாரர் யாவரும் அங்கு சமூகமளிபார். இவ்வேளையில் உபயகாரருக்குக் காளாஞ்சி வழங்கப்படும். காளாஞ்சியைக் ‘கபடா’ என்பவர் வழங்குவது மரபாகும். கபடா என்பவரது பணி மிக உயர்வானது. உற்சவகாலங்களில் கோயிலுக்கெனக் கொடுக்கப்படும் பொருட்களைப் பொறுப்பேற்பது, பிரசாதங்களை உற்சவகாரருக்குக் கொடுப்பது போன்ற சில பணிகள் இவரது பொறுப்பாகும். காளாஞ்சியைக் கொடுப்பதற்குப் பெயர்களை அழைக்கும் பொழுது, உரியவர் வராதவிடத்து அந்தக் காளாஞ்சியை மற்றொருவருக்குப் பரவிக்காது ஓரிடத்தில் வைத்துவிடும் வழக்கமும் இக்கோயிலில் காணப்படுகின்றது. கபடா உற்சவகாரர்களின் பெயர்ப்பட்டியலை வாசிக்க, அதற்குரியவர்கள் வந்து காளாஞ்சியைப் பெறுவர். இவர்களில் சகல இனத்தவர்களும் அடங்குவர். ‘சிலாபம் இஸ்லாமான பிள்ளைகள்’ என அழைக்கும்போது, இஸ்லாமிய ஆண்கள் தமது மத வழக்கப்படி தொப்பியணிந்து காளாஞ்சியைப் பெறுவது சமரச சன்மார்க்க உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகக் காணப்படுகின்றது.

‘கதிர்காமம் பௌத்த கபுறாளைமார்களால் பூசை செய்யப்பட்டபோதிலும், இந்துக்களே பெரும்பான்மையினராக இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னேசுவரம் ஆலயம் இந்துமதத்தைச் சார்ந்த திராவிடர்களால் பூசை செய்யப்பட்ட போதிலும் பெரும்பான்மையோராகப் பௌத்தமக்களே வழிபாடு செய்கின்றனர்’ என இலங்கை ஜனாதிபதியாயிருந்த மதிப்பிற்குரிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் குறிப்பிட்டது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

நாகர், இயக்கர் என்போரே ஈழத்தின் ஆதிக்குடிகளாக விளங்கியவர்கள். சைவசமயிகளாகக் காணப்பட்ட இம்மக்கள் பின்னர், காலத்திற்குக் காலம் ஈழத்திற்குள் நுழைந்த அன்னியரின் மதங்களைப் பின்பற்றினர். மதம் மாறியபோதிலும் இம்மக்கிளடையே ஆதிவழிபாட்டு எச்சங்களும், பாரம்பரியங்களும் இன்றும் நிலைகொண்டு விளங்குவதை முன்னேசுவரம், கோணேசுவரம், கதிர்காமம் போன்ற பல ஆலயங்களின் வழிபாட்டு முறைகளிலிருந்து அறியக் கூடியதாயுள்ளது.

இவ்வாலயத்திற்கு உள்வீதி, மாடவீதி, ராஜவீதியென மூன்று வீதிகள் உண்டு, முன்னேசுவரம் ஆலயத்திற்கு இராஜகோபுரம் கிடையாது. 50 அடி உயரமுடைய ஸ்தூபி காணப்படுகின்றது. இந்த ஸ்தூபி, இந்தியாவிலுள்ள தஞ்சாவூர் பிரகதீஸ்வரன் கோயில் ஸ்தூபியை ஒத்தத்தாகக் காணப்படுகின்றது. இது அழகிய சுதை வேலைப்பாடுடையதாகவும் விளங்குகின்றது. முன்னேசுவரம் ஆலேயத்தில் சிவன், அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் ஆகியோர் எழுந்தருள நான்கு தேர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சிவனுக்குரிய தேர் கட்டுத் தேராகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அம்பாளுக்கும் கட்டுத்தேரே பயன்படுத்தப்பட்டுப் பின்னர் செய்கைத்தேர் செய்யப்பட்டது. வேகதத்தில் ரதத்திற்கும் நமஸ்காரம், ரதத்திலுள்ள தெய்வத்திற்கும் நமஸ்காரம் என்று கூறப்பட்டுள்ளது. ரதமும் தெய்வீக வடிவானதே, எவ்வாறு கோபுரத்தை ஸ்தூல வடிவினதாக வணங்குகின்றோமோ, அவ்வாறே ஸ்தூலமான தேரும், அதற்குள் சூக்குமமான விக்கிரகமும் இருப்பதாகப் பரவித்து வணங்குதல் வேண்டும்.

முன்னேசுவர ஆலய தல விருட்சமாக வில்வமும், அரசும் போற்றப்படுகின்றன. வில்வ விருட்சம் கோயிலுக்குள் இருக்கின்றது. அரசு கோயிலுக்கு முன் காணப்படுகின்றது. வில்வ விருட்சத்திற்கு நித்திய பூசை நடைபெறும். இங்கு வாசிக்கப்படும் வாத்தியத்தினைத் தம்பட்டம் என அழைப்பர். தம்பட்டம் அடிப்போர் தம்மை வீரபாண்டியன் பரம்பரை எனக் கூறிக் கொள்கின்றனர். இந்த வாத்தியத்தை வாசிப்பவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் இவர்களது மூதாதையர் இதனை வாசிக்கும்பொழுது தாளம்போட்டு இந்திரதாளம், ரிஷபதாளம், கணேசதாளம், பிரும்பதாளம் போன்றவற்றை வாசித்தார்கள் என இம்மக்களோடு பல ஆண்டுகளாகப் பழகியோர் கூறியுள்ளனர். இக் கூற்றிலிருந்து மக்களிடையே ஏற்பட்ட கலாச்சார மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறான பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்ட முன்னேசுவரம், பழம்பெருமை மிக்க ஆலயம் என்பதை புராண வரலாற்றுச் செய்திகளோடு. இன்றுவரை கடைப்பிடிக்கப்படும் மரபுகளும் தெளிவாக விளக்கியுள்ளன.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாயக்
கோணாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென் சொல்லி வாழ்த்துவனே.

(திருவாசம்)

முன்னேஸ்வரம் – இலங்கை
Scroll to top