நவராத்திரி

நவராத்திரி

நவராத்திரி, அம்பிகையை அவளது பல்வேறு வடிவங்களில் ஒன்பது இரவுகள் வழிபடும் திருவிழா.

பண்டைய இந்து நூல்களில் இருவேறு நவராத்திரிகள் குறிப்பிடப்படுகின்றன- சைத்ர நவராத்ரா, சாரதிய நவராத்ரா. இரு நவராத்திரிகளும் அம்பிகையை அவளது பல்வேறு உருவங்களில் வழிபட்டாலும், சைத்ர நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று ஸ்ரீ ராமர் பிறந்த தினமான ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுவது விசேஷம்.

மற்றபடி இரு நவராத்திரிகளிலும், தீய சக்திகளை தேவ சக்திகள் வெற்றி கொண்டதை பத்தாம் நாளன்று தசரா கொண்டாட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதிலும் பல்வேறு வடிவங்கள் உள்ளன.

தேசத்தின் சில பகுதிகளில் அம்பிகை அவளது ஒன்பது வடிவங்களில் வழிபடப்படுகிறாள்- துர்கா, உமா, கெளரி, பார்வதி, ஜகதாம்பா, காளி, சண்டி, பைரவி, அம்பிகை. இந்த ஒன்பது நாட்களில் உண்ணா நோன்பிருந்து இரவுகளில் அம்பாளின் நாமத்தை ஜெபித்தபடி கண் விழித்திருப்பது வழக்கம். இறுதி நாளன்று சிறுமிகள் இல்லங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களை அம்பாளாய் கருதி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பெருமைப்படுத்துவது வழக்கம்.

இந்தியாவின் வட பகுதிகளில் நவராத்திரியில், ராவணன் மீது ராமன் வெற்றி கண்டதைக் கொண்டாடும் திருவிழாவாக ராமலீலாவும் கொண்டாடப்படுகிறது. மக்கள் உண்ணாநோன்பிருந்து ராமாயணம் வாசிப்பது வழக்கம். விஜய தசமி, அல்லது தசரா என்று அழைக்கப்படும் பத்தாம் நாளன்று ராவணன், கும்பகர்ணன் மற்றும் பலரின் கொடும்பாவிகளைக் கொளுத்துவது ராமலீலா கொண்டாட்டங்களின் தனித்துவம்.

தென்னிந்தியாவில் முதல் மூன்று நாட்களும் லட்சுமியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியும், இறுதி மூன்று நாட்கள் துர்க்கையும் வழிபடப்படுகின்றனர். பத்தாம் நாளான விஜய தசமி இந்தியாவெங்கும் கொண்டாடப்படுவது போலவே தெய்வ சக்திகளின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.

விஜயதசமியன்று அம்பாளின் அருள் நாடி, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலருக்கும் விஜயதசமியே தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் முதல் நாளாக இருக்கிறது.

வேறொரு சிறு மரபில், தென்னிந்தியாவில் சில இடங்களில், கடைசி மூன்று நாட்களில் துர்க்கையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக சரஸ்வதி தேவியைக் கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி
Scroll to top