மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2
இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே!
ஹரித்ரா’ என்று வடமொழியிலும், மஞ்சள், அரிசனம், உருத்திரம், கசாபம், கர்ப்பகம், காஞ்சல், கிறகன், தேசனி, நிசாகு, குளவிந்தம், கோட்டம், சோணிதம், மாதளை எனத் தமிழிலும் பல பெயர்கள் மஞ்சளுக்கு உண்டு.
‘புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு’ என்பார் திருமூலர். ‘பொன் வைக்கும் இடத்திலே பூ வைத்தல்’ என்பது பழமொழி. மங்கையரை ‘பூவையர்’ என்றும் அழைப்பர். மங்கைப் பருவத்தை அடைந்த பெண்ணை ‘பூப்படைந்தாள்’ என்று அழைப்பது வழக்கம். மன்மதனும் மலர்க்கணை (மலரம்பு) விட்டு காதலைத் தூண்டுவானாம். வணிகம் தொடங்கும்போது பூக்களை வைத்துத் தொடங்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது.
ஜோதி வடிவமான இறைவனைக் காட்டும் ஜோதியே திருவிளக்காகும். தெய்வமாகவே கருதப்படுவதால் அதனை அருள்விளக்கு என்றழைப்பர். புற இருளை மட்டும் போக்கும் நிலையில் அமைவது விளக்கு. புற இருள் அக இருள் இரண்டையும் போக்குவது திருவிளக்கு!
வீட்டிலும் சரி, வெளியிடங்களிலும் சரி… திருவிளக்கை ஏற்றிய பிறகுதான் மற்ற மங்கல நிகழ்ச்சிகளைத் தொடங்குவர். விளக்குகளில் குத்துவிளக்கு, பாவை விளக்கு, கை விளக்கு, சர விளக்கு, தூண்டா விளக்கு எனப் பலவகை உண்டு. அக்காலத்தில் நெய்விளக்கு தீபம் காட்டித்தான் பூஜையைப் பூர்த்தி செய்வார்கள். கற்பூரம் நடுவில் வந்து சேர்ந்தது. அதுவும் கலப்படமாகிவிட்டது. அதன் புகை உடலுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, நெய் தீபமே ஏற்றது. தீபத்துக்கு உரிய கார்த்திகை மாதம் முழுவதும் காலையும், மாலையும் திருவிளக்கு ஏற்றுவது நல்ல பலன்களைத் தரும். இதனை, ‘கார்த்திகை விளக்கீடு’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மஞ்சளுக்கு அடுத்த மங்கலப் பொருள் குங்குமம். மஞ்சள்தூள், வெங்காரம், நல்லெண்ணெய் கூட்டணியில் உருவாவது குங்குமம்.
சுமங்கலியின் அடையாளச் சின்னம் குங்குமமே! மணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம். ஏனெனில், நெற்றி வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது இந்து சமய நம்பிக்கை. மங்கல விழாக்களுக்குக் குங்குமம் கொடுத்து அழைப்பது நமது பாரம்பரியம். மங்கல நாட்களில் வீட்டின் வாயிற்படியில் குங்குமத் திலகம் வைப்பது வழக்கம். நவராத்திரி பூஜை ஆயுத பூஜையின்போது பாடப் புத்தகங்கள், வியாபார கணக்குப் புத்தகங்கள், வீட்டு அலமாரிகள் முதல் இரும்பு ஆயுதங்கள் வரை அத்தனைக்கும் சந்தன குங்குமப் பொட்டுவைத்து மகிழ்வார்கள். இதனால் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
மூன்றாவது ( இறுதிப் பதிவு) பகுதி தொடரும் நண்பர்களே!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of text
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2
Scroll to top