ஆலயங்களில், வீடுகளில் என்று பல தரப்பட்ட சமயங்களில் நாம் ஆச்சாரியாரை வரவழைத்து ஹோமம் முதலான வற்றை செய்கிறோம். அது சம்பந்தமாக ஓர் விளக்கத்தை அறிவோம்.
ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?
சமித்து, அன்னம், ஆஜ்யம் என்பது அத்தனை விதமான ஹோமங்களுக்கும் உண்டான பொதுவான விதி. சமித்து என்பது ஹோமத்தில் அக்னியை வலுப்படுத்துவதற்கான குச்சி. அன்னம் என்பது வெள்ளை சாதம். ஆஜ்யம் என்பது பசுநெய். ஆக இந்த மூன்றும் ஹோமம் செய்வதற்குண்டான அத்தியாவசியமான பொருட்கள். சமித்துக்களிலும் எல்லா மரத்தினுடைய குச்சிகளையும் உபயோகப்படுத்த இயலாது.
அரசு, புரசு, எருக்கு, கருங்காலி, அத்தி, வன்னி, நாயுருவி என்று ஒவ்வொரு ஹோமத்திற்கும் ஒவ்வொரு விதமான சமித்தினைப் பயன்படுத்துவர். பசு நெய்யை விட்டு அக்னியை வளர்ப்பதே மிகவும் முக்கியமான விதி. இந்த பசு நெய் என்பதே நாம் இறைவனுக்கு கொடுக்கும் ஆகாரம். இறைவனுக்கு ஆகாரமாக உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான பொருளை கொடுக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் கிடைத்ததே பசுநெய்.
பசுமாடு, சுத்தத்தின் அடையாளம். பசுமாட்டின் கோமியத்தை இல்லத்தை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துகிறோம். தொற்றுக் கிருமிகள் அண்டாமல் இருப்பதற்காக சாணம் கரைத்து வாசலில் தெளிக்கிறோம். பசுவின் கழிவுகளே இத்தனை புனிதத்தன்மை வாய்ந்தது என்றால் பசுவின் பால்தான் எத்தனை சிறப்புடையது! அந்தப் பாலைப் புடமாக்கி அதிலிருந்து உருவாகும் தயிர் அதைவிட புனிதமானது.
அந்தத் தயிரைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் அதனினும் உயர்ந்தது. இறுதியாக அந்த வெண்ணெயைக் காய்ச்சினால் கிடைக்கும் நெய், உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமானது. ஆகவே இந்த பரிசுத்தமான நெய்யினை இறைவனுக்கு ஆஹுதியாகத் தரவேண்டும் என்கிறது வேதம். இறைவனுக்கு உரிய ஆகாரமாகவே நெய்யினை சமர்ப்பிக்கிறோம்.
ஆக ஹோமத்திற்காக வாங்கும் நெய், பசுநெய்யாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். நெய்தான் ஆகாரம் என்றால் அன்னம் எதற்கு என்ற கேள்வி எழலாம். அன்னம் என்பது, இறைவனுக்கும், நமக்கும் இடையே தூதுவனாக செயல்படும் அக்னி பகவானுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒரு ஊதியம்.
மற்றபடி விலை உயர்ந்த பட்டு, தானியங்கள், பழங்கள், ரத்தினங்கள் ஆகியவற்றை ஹோமத்தில் இடுவது என்பது, இறைவன் நமக்கு அளித்த செல்வத்தில் ஒரு சிறிய பாகத்தினை மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணிக்கிறோம் என்ற பக்தி உணர்வோடு சமர்ப்பணம் செய்கின்ற ஒரு செயல். ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் நாம் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதை இறைவன்
உண்மையாகவே ஏற்றுக் கொள்கிறான் என்பதற்கு கண்கூடான ஆதாரமும் உண்டு.
விலை உயர்ந்த பட்டுத்துணி, திரவியங்கள், பழங்கள் முதலானவற்றை ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் சமர்ப்பிக்கும்போது அந்த ஹோமத்தில் இருந்து அந்தப் பொருள் கருகும் துர்நாற்றம் வரவே வராது. சாதாரணமாக ஒரு துணியின் மூலையில் லேசாக தீப்பிடித்துக் கருகினாலே துர்நாற்றம் வீடு முழுவதும் பரவும்போது, ஒரு முழு புடவையை மந்திர சப்தத்துடன் ஹோமத்தில் சமர்ப்பிக்கும்போது எந்த துர்நாற்றத்தையும் நுகர முடியாது. இதுவே நாம் கொடுக்கும் ஆஹுதிகளை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் என்பதற்கான சான்று. ஆக அக்னியில் பொருட்களை சமர்ப்பணம் செய்வது என்பது இறைவனுக்கு அக்னி மூலமாக நம்முடைய காணிக்கைகளை செலுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம்.
Prepared by:
Panchadcharan Swaminathasarma
E magazine Editor,
www.modernhinduculture.com
ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?