சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!!
முன்னோர் ஆராதனையில், தன்னுடைய குலத்தில் தோன்றிய மற்ற பித்ருக்களுக்காக தரையில் பிண்டம் வைப்பார்கள். அதைக் காகத்துக்கு அளிப்பார்கள். ‘என் குலத்தில் பிறந்தவர்களின் உயிர் பிரிந்த பூதவுடல்கள் – அடக்கம் செய்யப்பட்டதும் எரியூட்டப் பட்டதுமான அவை திருப்தியடையும் பொருட்டு இந்தப் பிண்டத்தை தரையில் வைக்கிறேன். தரையைத் தொட்டதும் அவர்கள் திருப்தி பெற்று, நற்கதியை அடையட்டும் (யே அக்னி தத்தா…)’ என்ற வேண்டுகோளோடு தரையில் வைப்பார்கள். அவர்கள் பிண்டத்தைத் தரையில் வைத்ததும் திருப்தி ஏற்பட்டுவிட்டது. அடுத்து, அந்தப் பிண்டத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழும்பியது. ‘அதைக் காகத்துக்கு அளித்துவிடு!’ என்று தர்மசாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருள் வீணாகாமல் மீண்டும் ஓர் உபயோகத்துக்கு, வேறோர் உயிரினத்துக்கு உணவாகும் என்ற அறக்கொள்கையின் வெளிப்பாடே இந்தப் பரிந்துரை. பஜனையில் சுண்டல் நிவேதனம் பண்ணப்படும். அதன்பிறகு அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்போம். புதுப் பூணூல் அணிந்த பிறகு, பழசை என்ன செய்வது என்ற கேள்விக்கு, ‘தண்ணீரில் சேர்த்துவிடு’ என்று சாஸ்திரம் பரிந்துரைக்கும். அதேபோன்று, முன்னோர் உணவை உட்கொண்ட பிறகு, அந்த இலையை என்ன செய்வது என்ற கேள்விக்கு, ‘ஆறிலோ, குளத்திலோ சேர்க்கலாம்; அல்லது, பூமியைத் தோண்டிப் புதைக்கலாம்’ என்று பதில் வரும்.
நாம் சாப்பிட்ட இலைகளை குப்பைத்தொட்டி யில் போடுவோம். பழங்களை உண்ட பிறகு, தோலை குப்பைத்தொட்டியில் சேர்ப்போம். லட்சார்ச்சனை முடிந்து மறுநாள் குவிந்திருக்கும் புஷ்பத்தை (நிர்மால்யத்தை) நீரில் சேர்ப்போம். முன்னோர்க்குத் தர்ப்பணம் செய்த பிறகு, அந்த நீரை ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ சேர்ப்போம். ‘வேள்வியில் ஈடுபட்டவன், தன் கைகளால் உடம்பைத் தொடக் கூடாது. நமைச்சல் ஏற்படும் தருணத்தில் அதைத் தணிக்க, கைகளால் சொறியக்கூடாது; மான் கொம்பை பயன்படுத்தலாம்’ என்கிறது வேதம். சரி, வேள்வி முடிந்ததும் மான் கொம்பை என்ன செய்வது எனும் கேள்விக்கு, ‘வேள்வியில் வைக்கப் பட்ட தொட்டியில் (சாத்வாலம்) சேர்த்துவிடச் சொல்லும்.
கும்பத்தில் இறையுருவத்தை வரவழைத்து பூஜை நிறைவேற்றப் படும். பூஜை முடிந்ததும், கும்பத்தில் வைத்த ப்ரதிமை, வஸ்திரம், கும்ப ரத்னம், நெல் அரிசி, ஊற்று, எள் ஆகியவற்றை என்ன செய்வது எனும் கேள்விக்கு, ‘ஆசார்யனுக்கு தானமாக அளித்துவிடு’ என்று பதில் சொல்கிறது சாஸ்திரம். பிள்ளையாரை மண்ணால் உருவாக்கி பூஜை செய்வோம். பூஜை முடிந்ததும், அவரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். பாலிகைகளில் (முளைப் பானை) தான்யத்தை விதைத்து வழிபடுவோம். முடிந்த பிறகு பாலிகைகளை நீரில் கரைத்து விடுவோம்.
இங்கெல்லாம், பயன்படுத்திய பொருள் பலனை அடைந்தபிறகு, அதை என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும்போது, அவற்றை உபயுக்தஸம்ஸ்காரம் (பயனை அளித்த பொருள்கள்) ஆன பொருள்களுக்கு விநியோகிக் கும்படி சாஸ்திரம் சொல்லும்.சாஸ்திரம் சொன்னதை நடை முறைப்படுத்தினால் அந்தப் பொருளும் முழுமையாகப் பயன்பட்டு, நிறைவை எட்டும்.
நாம் திருப்தியடைந்த பிறகு மிச்சம் இருப்பது பல விலங்கினங்களுக்குப் பயன்பட்டு முழுமை பெறுவதும் உண்டு. அறுவடைக்குப் பிறகான வைக்கோலும், எண்ணெய் ஆட்டிய பிறகு மிஞ்சும் புண்ணாக்கும், நெல் குத்திய தவிடும் நமக்கு உதவும் விலங்கினங்களுக்குப் பயன்பட்டன. வீட்டு முற்றத்தில் இருக்கும் மாசுகளையும் அழுக்கையும் உண்டு அகற்றித் தூய்மைப்படுத்தும் காகத்துக்கு உணவளிக்கும் ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, அதைக் கடமையாகச் செய்யப் பரிந்துரைக்கும் சனாதனத்தின் செயல்பாடு போற்றுதலுக்கு உரியது என்ற எண்ணம் தோன்றுவதற்கு ஏற்ப, நமது விவேகம் வளரவேண்டும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of text
சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!!
Scroll to top