தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது :
மனம் போன போக்கில் பலரும் பலதையும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், ஆதாரம் இல்லாமல் பிள்ளைகள் இல்லாதவர்கள் பற்றி கதை பரப்புவார்கள் , ஆனால் சாஸ்திரம் என்ன சொல்கிறது பார்ப்போம்.
‘புத்’ எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால், ‘புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் போலும். இது தவறு. புத்திரன் இல்லை என்றால் மோட்சமும் இல்லை என்று தர்ம சாஸ்திரம் சொல்லாது. அப்படி சொல்லவும் இல்லை! மோட்சத்துக்கும், புத்திரனுக்கும் சம்பந்தம் இல்லை. இறந்தவரின் அறம் அவரைக் கரையேற்றி விடும். ஆனாலும், அவரிடமிருந்து வந்த நாம், அவருக்குச் செய்யும் கடமைகளில் இருந்து நழுவக் கூடாது என்கிறது சாஸ்திரம்.
அவரின் ஜீவ அணுக்களால் நம் உடல் தோன்றியது. ஆக… அவரின் ஜீவ அணுக்களில் ஒரு பகுதி நம்மிலும் உண்டு. இந்தத் தொடர்பை அறிந்து, இறப்புத் தீட்டைக் கடைப்பிடிக்கிறோம். மரணம் தவிர்க்கமுடியாதது. துயரம் ஒருபுறம் இருந்தாலும் அதிலேயே ஆழ்ந்துவிடாமல், ஈமச் சடங்குகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். ‘அவர் கரையேறி விட்டார்’ என்ற எண்ணம் நம் மனதில் பதியும்போது, நமது செயல்பாடுகள் சிறப்பு பெறும்.
‘காசியில் உயிர் துறந்தால் மோட்சம்’ என்கிறது புராணம். நம் முன்னோர்கள் இதற்காகவே காசிக்குச் செல்வர். அவர்களில், புத்திர பாக்கியம் வாய்த்தவர்களும் உண்டு; வாய்க்காதவர்களும் உண்டு. புராண விளக்கங்களைத் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட அணுகுமுறை தேவை. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
வம்ச விருத்திக்குப் புத்திரன் வேண்டும். புத்திரனைப் பெற்றுக் கொள்வது சிறப்பு என்பதை அறிவுறுத்துவதே சாஸ்திரத்தின் நோக்கம்.
புத்திரர் இல்லாதவர்களுக்கு, மகள் வயிற்றுப் பேரன் மூலம் ஈமச் சடங்கை நிகழ்த்தச் சொல்லும். பேரனும் இல்லையெனில், மகள் ஈமச் சடங்கைச் செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.
இப்படி புத்திரரில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக ஒவ்வொருவராகக் குறிப்பிடும் சாஸ்திரம்… உறவுகள் எவரும் இல்லையெனில், தொடர்பு இல்லாத ஒருவனும் ஈமச் சடங்கு செய்யலாம் என்றும் ஒரு வாய்ப்பு தருகிறது.
இந்த மண்ணில் தோன்றியவன் ஈமச் சடங்கை இழக்கக் கூடாது என்பதே சாஸ்திரத்தின் நோக்கம். அநாதைகளுக்கும் ஈமச் சடங்கை நிறைவேற்ற வற்புறுத்துகிறது அது. ஆகையால், மனக் குழப்பம் தேவையில்லை.
நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது :