தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எந்த பூஜையாக இருந்தால் என்ன , வழிபாடுகளாக இருந்தால் என்ன பூக்களின் அவசியம் என்ன? பூக்கள் இல்லாமல் பூஜையும் இல்லை வழிபாடுகளும் இல்லை!!!
`புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. நம் கர்மவினைகள் எல்லாம் நீங்கி, நாம் எல்லாம்வல்ல சிவபெருமானை அடைய, நீரும் பூவும் அவசியம் என்பது திருஞானசம்பந்தரின் வழிகாட்டல்.
பூக்களை மேல்நோக்கியே சார்த்தவேண்டும். கவிழ்ந்து இருப்பது போல் சார்த்தக் கூடாது. அர்ச்சனை போன்ற தருணங்களில் கவிழ்ந்து விழுந்தால் தவறில்லை. ஆலயங்களில் வளரும் மலரையே இறைவனுக்கு அளிக்க வேண்டும். மிகவும் தூய்மையான இடத்தில் அவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கவேண்டும். இந்தக் காரணங்களாலேயே நந்தவனங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டன.
நாம் பிறந்தது முதலே கடவுள்களுக்கு பூக்களை வைத்து வழிபடுவதை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எதற்காக பூக்களை வைத்து வழிபடுகிறோம் என்று இதுவரை நாம் சிந்தித்து பார்த்திருக்க மாட்டோம். நமது பெற்றோர்களை கேட்டால் அவர்களுக்கும் இதற்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடவுளை பூக்கள் வைத்து வழிபடுவது என்பது யுகங்களை கடந்தும் இருக்கும் ஒரு முக்கிய முறையாகும்!
பூக்கள் கடவுளுக்கு வைத்து வழிபடபடுவதற்கான முதல் காரணம் அவை அழகானவை என்பதுதான். அழகானவை என்பதையும் தாண்டி அவை தூய்மையானவை. தவறான இடத்தில பூக்கும் மலர் கூட அதன் தனித்தன்மையை இழக்காமல் அதனுடைய வாசனையைத்தான் தரும். அதுபோலத்தான் மனிதனும் இருக்க வேண்டும். பூக்களை கொண்டு கடவுளை வழிபடும்போது கடவுளின் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
பூக்கள் ஒரு இடத்தின் சூழ்நிலையை சுகந்தமானதாக மாற்றக்கூடும். அமைதியாகவும், அழகாகவும், நறுமணத்துடன் இருக்கும் இது உங்கள் இல்லத்திற்கு கடவுளை அழைத்துவரும்.
கடவுளுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது கடவுள் மீது நமக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். இவ்வாறு வைத்து வழிபடுவது நமது ஆன்மாவின் ஒருபகுதியை கடவுளுக்கு கொடுப்பது போன்றதாகும்.
பூக்கள் கிடைக்கவில்லை எனில் வில்வம், துளசி போன்ற இலைகளைப் பயன்படுத்தி வழிபடலாம். அவையும் இல்லையெனில், அக்ஷதையாலும் தூய நெற்பொரி கொண்டும் வழிபடலாம். இவை எதுவும் கிடைக்கவில்லை என்றால் பக்தியுடன் இறைவனை நினைத்து வழிபடலாம்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
வழிபாடுகளில் பூக்களின் அவசியம்!!!