மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் முதலிய இறை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள், யாக கும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அவற்றை அவதானித்துள்ளோம். ஏன் அப்படி யாக சாலை பூஜைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிவோம் நண்பர்களே!
பொதுவாகவே இந்து மதத்தில் உள்ள அனைத்து சடங்குகளுக்கும் மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. கலசம், அக்னி, வேதியர்( சிவாச்சாரியார்) ஆகிய மூன்றும் இன்றி எந்த ஒரு சடங்கினையும் இந்து மதத்தில் செய்ய இயலாது. இதற்கு கும்பாபிஷேகமும் விலக்கு அல்ல.
இறைசக்தியை ஆவாஹனம் செய்வதற்காக கலசங்கள் வைக்கப்படுகின்றன. இறைவனின் கையால் நமக்கு நேரடியாக வந்து சேருகின்ற அருட்பிரசாதம் நீர். ‘ஆப:’ என்றால் நீர். இதனை அப்பு என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள்.
‘ஆபோவா இதகும் ஸர்வம்’ என்கிறது வேதம். இதனையே திருவள்ளுவர் ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்று குறிப்பிடுகிறார். இறைவனின் பிரசாதமாக நாம் பெற்ற நீரினை கலசத்தில் வைத்து நிரப்பி அதில் இறைவனை ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறார்கள். மனிதன் இறைவனுக்குக் கொடுக்கின்ற அவிர்பாகத்தை கொண்டு சேர்க்கும் பணியினைச் செய்வது அக்னி. ‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அதாவது, மனிதன் தருகின்ற அவிர்பாகத்தை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் தூதுவனாக அக்னி பகவான் செயல்படுகிறார்.
அதனால்தான் ஒவ்வொரு சடங்கின்போதும் ஹோமம் செய்யப்படு கிறது. கலசம் வைத்து பூஜை செய்வதற்கும், அக்னி கார்யம் என்கின்ற ஹோமம் அல்லது யாகத்தினை செய்வதற்கும் வேதத்தினைக் கற்றுணர்ந்த வேதியரின் துணை தேவைப்படுகிறது. ஆக, கலசம், அக்னி, வேதியர் இந்த மூன்றின் துணை கொண்டே இந்துமத சடங்குகள் செய்யப்படுகின்றன. கும்பாபிஷேகம் என்பது ஊர் பொதுமக்கள் யாவரும் ஒன்றாக இணைந்து செய்கின்ற ஒரு பிரமாண்டமான பொதுநிகழ்ச்சி.
இதனால் மிகப் பெரிய யாகசாலை அமைக்கப்பெற்று அதில் பல மேடைகளை அமைத்து அவற்றில் கலசங்களை வைத்து இறை சக்திகளை ஆவாஹனம் செய்கிறார்கள். அந்தந்த மேடைக்கு எதிரே யாக குண்டங்கள் அமைத்து அந்தந்த தேவதைகளுக்கு உரிய அவிர்பாகத்தை சுத்தமான பசுநெய்யின் மூலமாக அளிக்கிறார்கள்.
தெய்வ சாந்நித்தியம் நிறைந்த பூஜிக்கப்பட்ட அந்த கலச நீரைக்கொண்டு சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலை வடிவங்கள் முழுமையாக சக்தி பெறுகின்றது என்பது நமது நம்பிக்கை. இந்தக் காரணங்களினால்தான் கும்பாபிஷேகத்தின்போது யாகசாலை பூஜை நடத்தப்படுகின்றது.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture. Org,
www.modernhinduculture.com
மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள் !