தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பெருமை மிகு மாதம் மார்கழி! தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம் மார்கழி. வழிபடுவோம். பலன் அடைவோம்.
“மாதங்களில் நான் தனுர் மாதம் (மார்கழி)” என்று கண்ணபிரான் அர்ஜனனுக்கு கூறியதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. தொன்றுதொட்டு இறைவனின் புனித மாதமாக இந்த மாதம் பல்வேறு காரணங்களுக்காகக் கருதப்படுகிறது. மகாபாரத யுத்தம், திருப்பாற்கடல் கடையப்பட்டது உள்ளிட்ட சில இதிகாச புராண சம்பவங்கள் இந்த மாதத்தில் நிகழ்ந்ததாக கூறுகிறது மரபு.
வைணவ சமயத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணாகத் திகழும் ஆண்டாளின் திருப்பாவை நோன்பு மார்கழி மாதத்துடன் தொடர்புடையது.
‘மார்கழித் திங்கள்’ என தொடங்கி அவர் முப்பது பாடல்களை இயற்றியுள்ளார். அவரது பாடல்கள் விஷ்ணு ஆலயங்களில் இன்றும் ஓதப்பட்டு வருகின்றன. இந்து வழிபாட்டு முறையில் தமிழ் காலங்காலமாகப் பெற்றுள்ள சிறப்பு கௌரவத்தின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது திருப்பாவை.
இந்த மாதத்தில்தான் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உள்ளிட்ட விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.