-
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?’ என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:|
என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும் பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental – ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும்.
ஜகத்தை சிருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு. இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம்.
ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர். பொய் சொல்லாதவர். வஞ்சனை தெரியாதவர். இந்திரியங்களை எல்லாம் வென்றவர். கருணை நிறைந்தவர். மகா ஞானி. இவரைப் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அனுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி உயர்ந்தது என்று சொன்னார்கள்.
ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்ரஹம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்?
-நன்றி ”தெய்வத்தின் குரல்”
-
ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர் எப்படி?