தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
விநாயகப் பெருமானை ஏன் ‘பிள்ளையார்’ என்று அழைத்து வழிபடுகிறோம்?
முழுமுதற் கடவுள்’ என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவருக்குப் பிள்ளையார் என்றும் பெயர். இந்த உலகின் ஜகன்மாதா பார்வதி தேவிக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான பெருமான் சிவபெருமானுக்கும் பிள்ளை. முதற்பிள்ளை என்பதால் ஆர் என்னும் மரியாதை விகுதி சேர்த்து பிள்ளையார் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டது.
விநாயகருக்குச் செய்யும் வழிபாடென்பது ஒருவரை மூவுலகிலும் உயர்ந்து நிற்கச்செய்யும் என்பதை ஔவையார் வாழ்வில் சம்பவம் நமக்கு உணர்த்தும். ஒருமுறை, சேரமான் பெருமானும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கயிலாயம் செல்லத் தீர்மானித்தனர். அப்போது வழியில் ஔவைப் பாட்டியையும் அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஔவையைச் சந்திக்க அவர்கள் வந்தபோது, ஔவை விநாயக பூஜையில் ஈடுபட்டிருந்தார்.
பூஜை நீண்டநேரம் நீடிக்கவே, `பூஜையை முடித்துக்கொண்டு சீக்கிரம் வாருங்கள். கயிலாயம் செல்ல வேண்டும்’ என்று அவசரப்படுத்தினர். ஆனால் ஔவையோ, `எனக்கு விநாயகர் பூஜையே முக்கியம் நீங்கள் வேண்டுமானால் கயிலாயம் செல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் பூஜையைத் தொடர்ந்தார்.
இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பூஜை நிறைவுற்றது, விநாயகர் மகிழ்ந்து ஔவைக்கு தரிசனம் தந்தார். கூடவே ஔவையைத் தன் துதிக்கையால் சுமந்துகொண்டு விண்ணில் பறந்து இருவருக்கும் முன்பாக கயிலாயத்தில் இருக்குமாறு செய்தார். விநாயகரை வழிபட்டால் உலகில் அனைவருக்கும் முன்பாக உயர்ந்து நிற்கலாம் என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டனர்.
இத்தகைய சிறப்புகளை உடைய விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அவதரித்தார்.