அறிந்து கொள்வோம் நண்பர்களே!
மாசி மகம் அண்மிக்கிறது!
மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். இப்படி, முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு. இந்த நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.