பிரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கூறுகிறார்:–
”இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு, சீமந்தம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சீமந்தம் என்பது முதல் குழந்தைக்காக மட்டுமே நடத்தப்படுவ தில்லை. பிற்பாடு உதிரத்தில் உருவாகும் அத்தனை குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் சீமந்தம் நடைபெறுகிறது. குழந்தை உருவாகும் இடத்தின் தூய்மையை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது சீமந்தம்.,
ஒருவேளை, சீமந்தம் நடைபெறாமலேயே முதல் குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தையை மடியில் வைத்துச் சீமந்தத்தை நடைமுறைப்படுத்திய பிறகே, அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மம் நடக்கும். அப்படியொரு நிபந்தனையை சாஸ்திரம் வகுத்திருக்கிறது. முதல் குழந்தைக்கு, பிறந்த பிறகும் சீமந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், 2-வது குழந்தைக்கு ‘சீமந்தம்’ என்ற கேள்வியே எழும்பாது. வளைகாப்பு ஒரு சம்பிரதாயம். அதை முதல் குழந்தைக்கு மட்டும் கடைப்பிடித்தால் போதும். அதன் பலன், பிறக்கப்போகும் அத்தனை குழந்தைகளுக்கும் கிடைத்துவிடும்.