கரங்களின் முக்கியத்துவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய – வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். கைகளைக் கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்).

ிருமணத்தை நிறைவுசெய்வது பாணிக்ரஹணம். அதாவது, கை பிடித்தல். கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமை படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கைகள் வேண்டும். கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அப்போது,கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்’ என்ற செய்யுளைச் சொல்லலாம்.

வேள்வித் தீயில் தேவர்களுக்கு அளிக்கவேண்டிய உணவைச் சேர்க்க வேண்டும். கரண்டியால் அளிப்பதா அல்லது கையால் அளிப்பதா என்கிற சந்தேகம் எழுந்தது. கையால் அளிப்பது சிறப்பு என்று முடிவாயிற்று. ‘உயிரினங்களில் யானை, மனிதன், குரங்கு ஆகிய மூன்றும் கைகளால் எடுத்து உண்ணும் இயல்பு கொண்டவை. நீ, மனிதன். சிறப்புப்பெற்ற கை இருக்கும்போது, அதைத் தவிர்ப்பது சரியல்ல; கையால் உணவைச் சேர்த்துவிடு’ என்று வேதம் பரிந்துரைத்தது.

கையிருந்தும் கரண்டியால் உணவருந்தும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். கையைவிட கரண்டி சுத்தம் என்று மனம் எண்ணுகிறது. மண்ணைப் பிசைந்து கையால் பிள்ளையாரை உருவாக்க வேண்டும். ஆனால், கை செய்ய வேண்டிய வேலையை எந்திரத்திடம் ஒப்படைத்துவிட்டோம். கொழுக்கட்டையைக் கையில் ஏந்தியிருப்பார் பிள்ளையார். அவரை ஐங்கரன் என்று சிறப்பிப்போம். அவருடைய கரத்துக்கு இருக்கும் சிறப்பு, நம் கைகளுக்கும் உண்டு. கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப்பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
—-ஆன்மிக இதழ் ஒன்றில் பிரம்மஸ்ரீ . சேஷாதிரிநாத சாஸ்திரிகள்.

கரங்களின் முக்கியத்துவம்!
Scroll to top