தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆவணி சதுர்த்தி அண்மிக்கிறது.முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்கள், வீடுகளில் உள்ள விநாயகருக்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை படைக்கப்படுகின்றன.
அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி உள்ளிட்டவை விநாயகருக்கு அணிவிக்கப்படுகின்றன.
விநாயகர் பொம்மைகள் செய்து விநாயக சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பொது இடத்தில் வைத்திருந்து வழிபாடு மேற்கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால் இவ்விழாவினை சமுதாயத் திருவிழா என்றே கூறலாம்.விநாயக சதுர்த்தி அன்று விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயக சதுர்த்தியில் இருந்து விரதத்தைத் தொடங்கி பின் வரும் மாதங்களிலும் சதுர்த்தி அன்று விரதத்தைத் தொடர்கின்றனர்.
இவ்விரதத்தை மேற்கொள்வதால் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.