தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
இக்கொண்டாட்டத்தில் பகவான் கிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் நிகழ்த்திய சாகசங்கள் மற்றும் அவரின் குறும்புத்தனமான விளையாட்டுகள் நினைவு கூறப்படுகின்றன.
இவ்விழாவின் போது நடைபெறும் வழிபாட்டில் குழந்தை கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தட்டை, அவல், அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள் போன்றவை இடம்பெறுவது தனிச்சிறப்பு ஆகும்.சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.