தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:
கருணாமூர்த்தியாகிய சோமாஸ்கந்தர்!
சிவனின் கருணா வடிவமாக சோமஸ்கந்தர் வழிபடப்படுகிறார். சோமானான சிவபெருமான் ஸ்கந்தர் எனப்படும் முருகன், உமையம்மையுடன் இணைந்து இருப்பதால் சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
இவ்வடிவில் இறைவன் அன்பான கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். குடும்ப உறவின் உன்னத நிலையை இவ்வடிவம் உணர்த்துகிறது.
சிவபெருமான் வலதுபக்கத்திலும், உமையம்மை இடது பக்கத்திலும் இவ்விருவருக்கு இடையில் முருகப்பெருமானும் காட்சியளிகின்றனர்.
சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து இவ்வுலகைக் காக்கும் பொருட்டு இறைவனார் தம் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்பு பொறிகளை அக்னிதேவனும், வாயுதேவனும் சரவணப்பொய்கையில் சேர்த்தனர்.
நெருப்பொறிகள் ஆறு தாமரைமலர்களில் ஆறுகுழந்தைகளாக மாறினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். குழந்தைகளைக் காண வந்த உமையம்மை ஆறுகுழந்தைகளை அணைத்த போது அறுவரும் ஒரே குழந்தையாக மாறினர். இவரே கந்தன் என்று அழைக்கப்பட்டார்.
கந்தன் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் இருந்து உலகத்திற்கு காட்சியளித்தார். இவ்வுருவமே சோமஸ்கந்தர் என்றழைக்கப்படுகிறது.
குழந்தைநாயகர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். இவரை வழிபட நல்ல குடும்ப வாழ்க்கையும், குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும்.