சூரிய வழிபாடு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவர்க்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் இம்முறை சூரிய வழிபாட்டுப் பொங்கல் நடைபெறுவது தனிச்சிறப்பு நண்பர்களே!

”சீலமாய் வாழ சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சந்திரா போற்றி

வீரியா போற்றி வினைகள் களைவாய்”.

நவக்கிரங்களில் முதலாவது கிரகம் சூரியன். மனித உடலில் மூளைக்கும் எலும்புக்கும் அதிபதியாக விளங்கும் ஆண் தன்மையுள்ள கிரகம் சூரியன் . சூரிய கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களிடம் தைரியம், வீரியம், ஆத்ம பலம், விசுவாசம் ஆகிய குணங்களை பார்க்கலாம். அதே நேரம் பித்தம் தொடர்பான வியாதிகளையும், உஷ்ண சம்பந்தமான வியாதிகளையும் ஏற்படுத்துகிறார் சூரிய பகவான்.

சூரிய பகவானின் புராண பின்னணி

சூரிய பகவான் ஓம் என்ற ஓசையில் இருந்து சூரியன் தோன்றினார் என்கிறது மார்க்கண்டேய புராணம்.

காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்கிறது பாரதம்.

சூரிய பகவான் பயன்படுத்தும் தேர் ஒரே ஒரு சக்கரம் கொண்டது, இந்த தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றது. இந்த ஏழு குதிரைகளும் ஏழு நிறங்களில் அமைந்துள்ளது.

சூரியனின் தேரை ஓட்டும் சாரதிக்கு அருணன் என்ற பெயர். மாற்று திறனாளியான அருணனுக்கு காலில் ஊணம். சூரியனின் தேர் மேற்கு முகமாக ஓடி மேருமலையை வலமாகச் சுற்றுகிறது. சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்று இரு மனைவிகள். எமன், சனி, அசுவினித் தேவர், சுக்கிரீவன், கர்ணன் என்போர் மகன்கள். யமுனை, பத்திரை இவர்கள் இருவரும் சூரியனின் மகள்கள்.
பாபக் கிரகமான சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுற்றி வர ஒரு மாத காலம் ஆகிறது. இப்படி சூரியன் பன்னிரண்டு ராசிகளில் பன்னிரண்டு மாதங்கள் சுற்றி வருகிறார்.

சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் ,வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் பகை பெறுகிறார். ஆனி மாதத்தில் மீதுன ராசியில் சம பலம் பெறுகிறார். ஆடி மாதத்தில் கடக ராசியில் நட்பு பெறுகிறார். ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகிறார். புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சம பலம் பெறுகிறார். அவர் ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் நீசமடைகிறார்.கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் நட்பு பெறுகிறார். மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் நட்பு பெறுகிறார். தை மாதத்தில் மகர ராசியில் பகை பெறுகிறார். மாசி மாதத்தில் கும்ப ராசியில் பகை பெறுகிறார். பங்குனி மாதத்தில் மீன ராசியில் நட்பு பெறுகிறார். சூரிய பகவான் நவநாயகர்களிலே தலைவர்.

சிவனது முக்கண்களிலே வலக் கண்ணாக இருக்கும் சூரியன், ஒருவருக்கு புகழ், மங்களம், உடல் நலம், ஆட்சித்திறம், செல்வாக்கு என பல நன்மைகளை வழங்குகிறார்.

சிவப்பு மலர்களால் அர்ச்சிப்பதாலும் சிவப்பு வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும், மாணிக்க மணியை அணிந்து கொள்வதாலும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாலும், கோதுமை தானியத்தைத் தானம் செய்வ தாலும், சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் சூரியனால் ஏற்படும் கிரக தோஷங்கள் நீங்குகிறது.

சூரிய பகவானை ஞாயிற்றுகிழமை உதய காலத்தில், கோதுமை பலகாரம், காரம் கலந்த சாதம் ஆகியவற்றை செந்தாமரை இலையில் படைத்து வழிபடுதல் சிறப்பு.

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
சூரிய வழிபாடு!
Scroll to top