பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம். எறும்பு, ஈ, கொசு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நம்மையும் அறியாமல் துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது.
அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார். புண்ணிய யாத்திரை, மகாமகம் நீராடல், கங்கோத்திரி, யமுனோத்ரி போன்ற தீர்த்த யாத்திரைகள் எல்லாம் அதற்கு உதவுவனதான். அதற்காக உயிரினங்களை துன்புறுத்திவிட்டு புனித நீராடலில் ஈடுபட்டால் பாவம் கழிந்துவிடும் என்று அர்த்தம் இல்லை.
இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற புரிதலே அவசியம். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம். அப்படி, பாவக்கணக்குகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் அற்புதமான நாள்தான் சிவராத்திரி.
சிவராத்திரிக்கும் மற்ற விழாக்க ளுக்கும் வித்தியாசங்கள் உண்டு. இறைவனின் அவதாரங்களை மையப்படுத்தி கிருஷ்ண ஜயந்தி, ராமநவமி, அனுமன் ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கரர் ஜயந்தி என விழாக்கள் உள்ளன. ஆனால், சிவபெருமான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற் பட்டவர் என்பதால், அவருக்கு ஜயந்தி என்பது கிடையாது.
சிவனருளைப் பெற ஆண்டிற்கு ஒருநாள் வரும் மஹாசிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்துத் தொழுவோம். தீராத பாவங்களும் பிணிகளும் தீர்ந்து, அவரின் பரிபூரண அருள் பெற்று வாழ்வில் உய்வோம்.