தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
புரட்டாதி மாதம் அண்மிக்கிறது. பல சிறப்புகள் கொண்டது புரட்டாதி மாதம். சர்வ மங்களம் பொருந்திய இந்த புரட்டாதி மாதத்தில் சனீஸ்வர வழிபாடு ,விஷ்ணு வழிபாடு மிகப் பிரபல்யம் பெற்றவை.
இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாதத்தில் தான்.
பொதுவாக சனிக்கிழமை சனீஸ்வரன், பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும். அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது.
சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.