தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

ஏகாதசி மகிமை பற்றி எங்கள் முன்னைய பதிவில் பகிர்ந்திருந்தோம்.

இப்போது அதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் இருந்து பங்குனி வரையிலான மாதங்களில் வரும் ஏகாதசி விரத பெயர்களையும் அதன் பலன்களையும் பார்ப்போம்.

சித்திரை மாதம்
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். தம்பதிகளின் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது.
தேய்பிறை ஏகாதசி பாபமோசநிகா ஏகாதசி எனப்படும். பாவங்கள் அனைத்தையும் போக்கும், இந்த ஏகாதசியின் பெருமையை படிப்பவர் மட்டுமல்லாது கேட்பவரின் பாவங்களையும் போக்கும்.

வைகாசி மாதம்
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி எனப்படும். சகல விதமான பாவங்களையும், அறியாமையையும் நீக்கும். இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அவதார புருஷரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்க, குலகுருவான வசிஷ்டர் எடுத்துரைத்தது.
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி, வரூதினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சௌபாக்கியங்களையும் கிடைக்கச் செய்யும். இந்த விரதம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும்.

ஆனிமாதம்
ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா அதாவது நீர் கூடப் பருகாமல் இருத்தல் எனப்படும். பீமன் இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.
ஆனி மாதம் தேய்பிறை ஏகாதசி அபரா எனப்படும். இது குரு நிந்தனை செய்வதால் வரக்கூடிய பாவம் மற்றும் பொய் சாட்சி போன்ற பாவங்களைப் போக்கும். இவ்விரதம் சிவராத்திரி விரதத்திற்கு ஈடான புண்ணியத்தைக் கொடுக்கும்.
ஆனி மாதத்தில் வரும் ‘அபரா’, ‘நிர்ஜலா’ ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுபவர்கள் சொர்க்கபிராப்தி அடைவர் என்பது நம்பிக்கை.

ஆடிமாதம்
ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஸ்ரீ வைகுண்டத்தில், மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள்.இந்த நாளில் விரதம் இருந்தால் தெய்வீக சிந்தனையை அதிகமாக்கும்.
ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை யோகினி என்பர். யோகிணி ஏகாதசி அன்று விரதமிருந்தால் நோய் தீரும் . யோக நிலையை அடைந்திட அருளும் நாள்.

ஆவணி மாதம்
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான “காமிகை’யிலும் தேய்பிறை ஏகாதசியான “புத்திரதா’விலும் விரதமிருப்பவர்களுக்கு நன் மக்கட் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.

புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். பாற்கடலில் துயிலும் நாராயணன் அருளால் மழை பொழிவித்து, நீர் வளத்தினைப் பெருக்கி செழுமையை கொடுக்கும்.
புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா என்று பெயர். இழந்ததை மீட்டுத் தரும் வல்லமை பெற்றது. ஹரிச்சந்திர மகாராஜன் இந்த விரதமிருந்து, இழந்த தனது நாட்டையும், மனைவி மக்களையும் பெறச் செய்த பெருமையுடையது.

ஐப்பசி மாதம்
ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா எனப்படும். இது பாவங்களைப் போக்கி கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.
ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நமது மூதாதையர்களுக்கு மோட்சம் அளிக்கும்நாள்.

கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. வாழும் காலங்களிலேயே மகிழ்ச்சியான வாழ்வை தரக்கூடியது.
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா எனப்படும். உயர்ந்த பதவிகளோடு, 21 தான பலன்களைக் கொடுக்கக் கூடியது.

மார்கழி மாதம்
மார்கழி மாத ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மோக்ஷ ப்ராப்தம் கிடைப்பதால், இந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர்.
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. இது சகல சௌபாக்கியங்களை கொடுக்கும். பகையை வெல்ல உதவும்.
தை மாதம்

தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் – சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது என்று சொல்லப்படுகிறது.
தை தேய்பிறை ஏகாதசிக்கு சபலா என்று பெயர். ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும்.

மாசி மாதம்
மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா ,அதாவது நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது என்று பெயர்.
மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா என்று பெயர். ஷட் என்றால் ஆறு; திலா என்றால் எள். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது என்பதால் தானம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரம்மஹத்தி தோசத்தை போக்கும்.

பங்குனி மாதம்
பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி எனப் பெயர். எல்லா தெய்வங்களும் கோமாதாவுள் அடக்கம் என்பதால், கோ தானம் செய்ய ஏற்றது.
பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா என்று பெயர். ராமர் இவ்விரதத்தினை மேற்கொண்டே சீதையை மீட்டார்.
பங்குனி ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு காரியத் தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.
கமலா ஏகாதசி
ஏதேனும் ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் 25-வது ஏகாதசி கமலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் மேற்கொண்டால் வைகுண்டவாசனின் மார்பில் உறையும் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
இந்த ஏகாதசி விரதங்களை நாமும் மேற்கொண்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.