தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அண்மையில் சனி மாற்றம் நடைபெற்றது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் அது சனிக் கிரகத்தால்தான் ஏற்பட்டது என்று எண்ணுவது தவறு.
பல்வேறு காரணங்களால் ஏற்படும் துயரம், சனி விரும்பாத இடத்தில் இருக்கும்வேளையில் நிகழும்போது, சனியைக் காரணம்காட்டி சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தவறு.
எதையும் ஆராயாமல், கிரகத்தை ஒரு வீட்டில் பார்த்ததும், நொடிப்பொழுதில் பலன் சொன்னால்… அந்தப் பலனின் நம்பகத்தன்மை குறைந்து காணப்படும்.
கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையை, ஒட்டுமொத்தமான கிரகங் களின் ஒத்துழைப்பை ஆராய்ந்து – அனுமானம் செய்து, பலன் சொல்லவேண்டும். காரணம் நிச்சயமாக இருந்தால்தான், அனுமானத்தில் நம்பகத்தன்மை இருக்கும்.
பொதுப்பலன் எல்லோருக்கும் பொருந்தாது. கர்மவினையின் தரம், மனிதனுக்கு மனிதன் மாறுபட்டு இருப்ப தால், மாறுபட்ட பலனே தென்படும்.
சூரியனின் கிரணங்கள் விழும் போது… எந்தப் பொருளின் மீது விழுகிறதோ, அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாறுபாடு விளையுமே தவிர, எல்லா பொருள்களிலும் ஒரேவிதமான மாறுபாடு தென்படாது. சூரியனின் ஒளியால் தண்ணீரில் இருக்கும் தாமரை மலரும்; சேறு கட்டியாகும்; உதிர்ந்த பூக்கள் வாடும்; தண்ணீர் ஆவியாகும்; பனிக்கட்டி கரைந்துபோகும். இங்கு தாக்கம் ஒன்றுதான்; மாறுபாடு வேறு. ஆகவே, பொறுமையோடு ஆராய்ந்து பலனை அறிந்துகொள்ள வேண்டும்.
நன்றி:- பிரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.