தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆலயங்களில் அடியார்கள் பலருக்கு அர்ச்சகர்கள் விபூதி முதலானவற்றை இட்டு விடுவதைப் பார்த்திருக்கிறோம். இது பற்றி ஷண்முக சிவாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று பார்போம்
‘அர்ச்சகஸ்ய ஹர: ஸாக்ஷாத்’ என்று ஆலயங் களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகப் பெருமக்களை கடவுளின் வடிவமாகப் பார்ப்பதே ஆகமங்கள் கூறியுள்ள மரபு.
அனைத்து அர்ச்சகர்களுக்கும்… அவரவர் நியமப்படி பூஜைகள் செய்துவிட்டு, வரக்கூடிய பக்தர்களின் குறைகளைக் கேட்டு இறைவனிடம் முறையிட்டு, தக்க ஆலோசனைகளைப் பக்தர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தைரியம் அளிப்பது என்பதே கடமை.
ஒரு தாயாருக்கு எப்படி அனைத்துக் குழந்தைகளும் ஒன்றோ, அதேபோன்று அர்ச்சகப் பெருமக்களுக்கு அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே. எனவே, அனைத்து ஜீவராசிகளும் நன்மையை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, பிறகு பக்தர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை நல் வழிப்படுத்துவது நம்முடைய சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியது.
அந்த உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு தங்கள் அருட்கரங்களால் விபூதி, குங்குமம் இட்டு விடுவது, ‘ஸ்பர்ச தீக்ஷை’ என்று சைவ மரபில் போற்றப்படும் கிரியைக்குச் சமமானது. ஆனால், ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பூஜை நடைமுறைகளுக்கு முரண்படாமலும், நித்திய பூஜைகளுக்குப் பாதிப்பு வராமலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.