தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே, ஆவணிமாத பெருமைகளை பார்த்து வருகிறோம். அந்த அடிப்படையில் ஆவணி மாதம் வரும் ஞாயிறும் பிரதானமாகிறது. ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் சஞ்சாரம் செய்கிறார், பலமான மாதம் இது, சூரியன் என்றால் ஞாயிறு, அந்த வகையில் ஆவணி ஞாயிறு பிரதானமான வழிபடும் நாளாகிறது.
இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள்தான் திரு என்ற அடைமொழியுடன் உள்ளன. முதலாவது திருவாதிரை. அது சிவனுக்குரியது. அடுத்தது திருவோணம். அது பெருமாளுக்குரியது.
வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் முதலான நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடியதாக திருமாலின் நட்சத்திரமாக திருவோணம் அமைந்துள்ளது.
சிம்ம ராசிக்குரியவர் சூரியனாதலால் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணியை சிங்க மாதம் என்று கூறுகிறார்கள். அம்மாதத்தையே அவர்கள் ஆண்டின் முதல் மாதமாகவும் கருதுகின்றனர்.
ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்த திருமால், மூன்றாவது அடியால் மகாபலியைப் பாதாள உலகத்திற்கு அழுத்தி பேரருள் புரிந்தவர் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. மகாபலி, பெருமானுக்குத் தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவணம் துவாதசி திதியில் வந்தால் அது மிகவும் உயர்வானது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளை ஒட்டிதான் மேஷ விஷு என்று கேரள மாநிலத்தில் விசேஷமாக பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்துக் கோலாகலம் காண்பார்கள். எல்லா ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். கேரள மாநிலத்தவர் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று திருவோண நாளாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவோண நாளை விரத நாளாக அனுசரிக்கின்றனர். முதல்நாள் இரவு உபவாசம். திருவோண நட்சத்திர நாளில் மகாவிஷ்ணுவைத் துதிப்பது, விஷ்ணு புராணத்தை பாராயணம் செய்வது, நிவேதனம் செய்த பொருட்களை ஒரு பொழுது மட்டும் உண்பது என விரதம் இருக்க வேண்டிய நாள் இது.
விரதம் இருக்க இயலாதவர்கள் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். சிரவண நட்சத்திரம் கூடிய நாளில் மாலைப் பொழுதில் மகாவிஷ்ணுவிற்கு கோயிலிலும் வீட்டிலும் நெய் விளக்கேற்றி வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்.
தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.