தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
திருக்கோயில்களும் திருக்குளங்களும் பற்றி அறிவோம்!
ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது’ என்று அர்த்தமாகும். புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும். ஒரு ஊருக்கு பெருமை தருவது, திருக் கோயில்களும் திருக்குளங்களுமாகும் !!!
கோயிலுக்கென்றே ஒரு தீர்த்தம் வேண்டும். தீர்த்தம் என்பது சுத்தமான நீர். பழைய கோயில்கள் எல்லாவற்றுக்குமே ஒரு மரம், ஒரு தீர்த்தம் இருக்கும்.
எங்கேயும் நாம் ஆராதனம் செய்யும்போது குளத்தில் நீராடி, இறைவனை வணங்க வேண்டும். குளம் இல்லை என்றால் வீட்டில் நீராடி வணங்க வேண்டும். கெட்ட எண்ணங்களை அகற்றிவிட்டாலே, மனம் சுத்தம் ஆகிவிடும். ஆனால், உடல் அப்படி அல்லவே… ஒருமுறை தூங்கி எழுந்தாலே உடல் அசுத்தமாகி விடுமே… ஓர் இரவு உடல் படுத்துவிட்டால், மறுநாள் காலையில் அது அசுத்தம்தான். குளித்தால்தான் சுத்தமாகும். இல்லாவிட்டால் வழிபடும் தகுதி வராது. அப்படிக் குளிப்பதற்குத்தான் குளம். நதிக்கரையில் மட்டுமே கோயில் கட்ட முடியாது. குளித்து தரிசனம் செய்ய பக்தர்களுக்கு உதவுவதற்குக் குளம்.
கோயிலில் பல வரிசையில் உற்சவங்கள் நடக்கும். தைப்பூசம், திருவாதிரை, பங்குனி உத்திரம் இப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட விசேஷத்துக்காக ஓர் உற்சவம் என்று பல உற்சவங்கள் வரும். பிரம்மோற்சவம் என்று தனியாக ஒன்றுண்டு. ‘ஆறாட்டு’ என்று ஒன்று இருக்கிறது. ஆற்றில் ஆடுவது. அப்போது ஸ்வாமியே நீரில் மூழ்குவார். அதற்கு அவருக்கென்றே, அவர் அருகிலேயே ஒரு நீர்நிலை வேண்டும்.
இதைத் தவிர, தெப்போற்சவம் என்றே ஒன்று உண்டு. தெப்பத்தை நீரில் மிதக்க விடுவார்கள். குளத்தின் நடுவில் ஒரு மண்டபம் இருக்கும். ஆக குளம் என்பது கோயிலின் ஓர் அங்கம். ஒரு பகுதி.
ஓர் ஊரில் உள்ள மக்கள் எண்ணிக்கை அடிப் படையில் குளம் இல்லாத சின்னக் கோயில்கள் கூட இருக்கலாம். ஸ்தல விருட்சமும் இருக்காது.
இது இரண்டும் இல்லை என்றால் கோயில் இல்லை என்று நினைக்கக் கூடாது. அடித்தளத்தில் இருப்பவர்கூட வந்து வழிபட வேண்டுமானால், சின்னதாக நாலு சுவர் எழுப்பி ஒரு கூரையைப் போட்டால்கூட அதற்குக் கோயிலாகும் தகுதி உண்டு. வளர்ந்து சௌகர்யங்கள் வரும்போது ஆகம விதிப்படி அவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம். அப்படி பல நாடுகளில் ஆலயங்கள் அமைந்துள்ளதை நாம் பார்க்கிறோம்! அதேசமயம் ஆலயங்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் ஊர்களிலும் குளங்கள் அமைக்கவும் முடியாது. இந்த திருக்குளங்களை மிகப் பழமையான
ஆலயங்களில் நிச்சயம் காணமுடியும்!!!
சில இடங்களில் குளத்தில் மீன்கள் வளரும். ஆமை இருக்கும். அவற்றுக்குப் பக்தர்கள் உணவிடுவார்கள். இப்படி ஜீவகாருண்யத்தை வளர்க்கவும் குளம் பயன்படும். எனவே, குளத்தின் முக்கியத்துவத்தைப் பல கோணங்களில் சொல்லலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
திருக்கோயில்களும் திருக்குளங்களும் பற்றி அறிவோம்!