தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆன்மிகம் என்ன சொல்கிறது என்பதை அறிவோம்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்றபடி உலகம் நிலைத்திருக்க நீர் அவசியம். பஞ்ச பாத்திரத்தில் நீர், கும்பத்தில் நீர் என்று ஒவ்வொரு பூஜையின் போதும் நீர் மிக மிக அவசியம்!
ஆரம்பத்திலும் ஸ்ரீவிநாயகரை விக்னங்கள் விலக வேண்டிக்கொள்வார்கள். ஜலத்துக்கு அதிபதியான வருண பகவானையும் ஆராதிப்பர். தொடர்ந்து அந்த இடமும், கிரியை செய்விக்கும் ஆசார்யரும், அங்கு குழுமியிருக்கும் அன்பர்களும் தூய்மைபெறும் விதம் தீர்த்தம் தெளிப்பதும் உண்டு.
பொருளாதாரத்துக்கு வருணன் அதிபதியாக விளங்குகிறார். அதனாலேயே தண்ணீரை வீணாக்கக்கூடாது என்று நம் முன்னோர் கூறி வந்தனர்.
தர்ம காரியங்களுக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அத்தியாவசியமானது நீர். நாம் அன்றாடம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றால், தண்ணீர் இல்லாமல் முடியாது. நம் உடலுக்குத் தண்ணீர் அவசியம்.
இந்தத் தண்ணீரை நமக்கு அளிக்கும் மழையை வரவழைக்கவேண்டும் எனில், தேவர்களை வழிபட வேண்டும். தேவர்கள், சிவபெருமான் இடும் கட்டளையை நிறைவேற்றுவதையே கடமையாகக் கொண்டவர்கள். அவர்கள், இங்கு நாம் செய்யும் யாக, வேள்விகளில் அளிக்கப்படும் அன்ன வகைகளாலும் மந்திரங்களாலும் திருப்தி அடைவார்கள்; மகிழ்ச்சியோடு நமக்கு வேண்டியதை அளித்து நம்மையும் திருப்தியோடு வாழச் செய்வார்கள்.
இந்த விவரத்தை பகவத் கீதையில் தெளிவாகக் கூறுகிறார், கிருஷ்ணபரமாத்மா. சாஸ்திரங்களும் சிறப்பாக வழிகாட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.
தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தர்மத்தை வழுவாமல் கடைப்பிடிக்கவேண்டும். நாம் இயற்கையின் குழந்தைகள். நம்மில் ஏற்படும் மாறுதல்கள், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, கண்டிப்பாக அவரவருக்கு விதிக்கப்பட்ட பூஜை முறை களையும் தர்மங்களையும் தவிர்க்காமல் செய்துவந்தால் போதும்; இயற்கைத் தாய் நம்மை ஆசீர்வதிப்பாள்.
எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. அவை சரியாக இல்லாமல், எவ்வளவு ஆராதனைகள் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் முன்னோர்கள் எவ்வளவோ கஷ்டங்களை தங்களின் ஒழுக்கத்தினாலும் இறைவழிபாட்டின் மூலமும் வென்றார்கள். முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. அவர்கள் சொன்னதை நாம் கேலியும் பண்ணக்கூடாது! நாமும் அவர்களின் வழியில் நடப்போம். பலனைப் பெறுவோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
நீரின்றி அமையாது உலகு!!! ஆன்மிகம் அறிவோம்!