தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!!
முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்?
வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார். அப்பொழுது வீணையை மீட்டிக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி “பெருமானே, பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர். அறியாமை இருளால் தங்கள் திரு நாமத்தைக் கூட ஓத மறந்திட்டனர். அவர்களது அறியாமையைத் தாங்கள் போக்க வேண்டும்” என வேண்டினார்.
உடன் நாரதரது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், “தான் பூலோகம் சென்று தர்மத்தைக் காக்கிறேன்” என கூறினார். மேலும் “நான் வரும் வரை நந்திதேவன் எனது இடத்தில் இருப்பான்” நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன், ஆதியில் அவதரித்தவன். நானே நந்திதேவன். தர்மமே வடிவானவன். “சிவாய நம” எனும் மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே. எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன்.
எனவே, நந்தி தேவரை வழிபாடு செய்பவர்க்கு சிறந்த பக்தியும், நல்ல குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்லெண்ணங்கள், நல் லொழுக்கங்கள் கிடைக்கும். இவற்றிற்கு மேலாக முக்தி யெனும் வீடுபேற்றையும் அடைவர் என விளக்கினார்.
சிவபெருமான் தனக்கு நிகராக நந்திதேவரை விளக்கியுள்ளதால் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் நந்தி தேவரை வழிபட்டுப் போற்ற வேண்டும்.
தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம் போன்ற பல சாஸ்திரங்களைத் தோற்றுவித்தவர் நந்தி தேவர்தான். இவரை நந்திகேசுவரர் என்ற முனிவராகவும் கருதுவதுண்டு.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், திருமூலர், வியாக்ர பாதர், பதஞ்சலி ஆகியோரெல்லாம் நந்தி தேவரின் சீடர்கள். அந்தச் சீடர்கள் குருவின் கட்டளைப்படி தாந்திரிக ஞானத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் சென்று பரப்பினார்கள்.
பிரதோஷ காலங்களில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் நந்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசித்தால் பக்தர்களின் தோஷமெல்லாம் விலகி அவர்கள் வாழ்வில் சந்தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
வழிபடுவோம் ! பலன் அடைவோம்!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சரசர்மா — இணையதள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!!