நண்பர்களே, அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய விடயம் இது:
”’எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வாஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:
ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, ‘தந்தி மணியாடரில் பணம் அனுப்பு’ என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ ‘தந்தி மணியார்டர்’ அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, “சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது” என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், “என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்” என்று கேட்டார். “அது போய்ச் சேர்ந்துவிடும்” என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். “கட்டுக் கடகட” என்று தந்தியும் அடித்தார். ‘ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லோட் லோட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்’ என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.
ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை
–நன்றி: ”தெய்வத்தின் குரல்”