தர்மம் செய்ய உகந்த தினம்- அட்சய திருதியை.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

அட்சய திருதியையின் சிறப்பு என்ன?
அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று: கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.
முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர். அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.

பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
தர்மம் செய்ய உகந்த தினம்- அட்சய திருதியை.
Scroll to top