ஒருவரது கருத்துக்கு நமது உடன்பாட்டைத் தெரிவிக்க, ‘ஆம்’ போடுவோம். சிலர், இரண்டு ‘ஆம்’களைச் சேர்த்து ‘ஆமாம்’ போடுவார்கள்! இது எவ்வளவு காலமாக வழக்கத்தில் இருக்கிறது?
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான பரிபாடலில், ‘ஆமாம்’ என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது என்றாலும், பேச்சு வழக்கில் இந்தச் சொல்லை கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு காலமாகத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
முற்காலத்தில் ‘ஆம்’ என்பதற்குப் பதிலாக ‘ஓம்’ என்பதே வழக்கத்தில் இருந்தது, இன்றும் இலங்கை உட்பட, இலங்கைத் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில், ஒப்புதலைக் குறிக்கும் சொல்லாக ‘ஓம்’ என்பதையே பயன்படுத்துகிறார்கள்.
இதற்குச் சான்று வில்லிபாரதம். பாண்டவர்களுக்காக தூது செல்ல முற்பட்டார் கண்ணன். அதற்கு முன்பாக அவரின் கால்களைக் கட்டிக் கொண்ட சகாதேவன், ‘‘பாரதப் போர் முடியும் வரை எங்களைக் காப்பதாக ஒப்புதல் அளித்தால் அன்றி தங்கள் திருவடியை விட மாட்டேன்!’’ என்று வேண்டிக் கொண்டான். அவனது கோரிக்கைக்கு, ‘ஓம்’ என்று கூறியே கண்ணன் ஒப்புதல் அளித்ததாக வில்லிபாரதம் குறிப்பிடுகிறது:
என்றென்று இறைஞ்சி
இருதாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு
‘ஓம்’ என்று உரைத்தருளி
நம் முன்னோர்கள் ஏன் இந்த வழக்கத்தைக் கையாண்டார்கள்?
‘ஓம்’ என்பது பிரணவச் சொல். அதைப் பல முறை சொல்வதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பயன் உண்டு. தினமும் பல முறை ‘ஓம்’ என்று சொல்ல வேண்டும்! வெறுமனே கூறினால், எத்தனை பேர் அதைக் கடைப் பிடிப்பார்கள்?!
ஆனால், பொழுது விடிந்து, அடையும் வரை ‘ஆம்’ போட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய.. அப்போதெல்லாம் ‘ஓம்’ என்றே சொல்லச் செய்தால், நம்மை அறியாமலேயே பிரணவ மந்திரத்தை அதிகம் உச்சரித்த பலன் கிடைத்துவிடும் அல்லவா! அதற்காகவே இந்த ஏற்பாடு ”ஓம்” என்று சொல்வோம்! அதன் பலனைப் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.
Comments by Dr. N. Somash Kurukkal