தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
காமாட்சி விளக்கின் மகிமை!!!
திருமணம், உபநயனம், புதுவீடு குடிபோதல் , என்று பல நிகழ்வுகளுக்கு காமாட்சி விளக்கு இன்றி அமையாததாகிறதை பார்க்கிறோம் ஏன் ?
வீட்டில் ஒளியூட்டவும், மகாலட்சுமியின் அருளைப் பெறவும், தீமைகள் விலகி, நல்லன நடைபெறவும் நாம் விளக்கை ஏற்றுகிறோம். வட்ட முகம், ஐந்து முகம் என பல விதங்களில் விளக்குகள் உண்டு.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் இருக்கும். இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால். சகல நன்மைகளும் ஏற்படுகின்றன.
உலக மக்களின் நன்மைக்காகத் தவமிருந்தார் காமாட்சி அம்மன். அவ்வாறு அவர் தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கின. அதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டால் ஒருவருக்கு, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.
காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது வழக்கம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மன் உடைய அருளும், அவரவர் குல தெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எதுவெனத் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாக நினைத்துக்கொண்டு, நீயே! என் குலதெய்வமாக இருந்து, என் குலத்தைக் காப்பாற்று! என வணங்கியபடி விளக்கேற்றி வழிபட வேண்டும். அதற்குக் காமாட்சி தீபம் என்று பெயர்.
அனைத்து தேவர்களின் அருளையும் ஒன்றாக பெறுவதற்காகத்தான் திருமண சமயங்களில் கூட மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக் கொண்டு அக்னியை வலம் வருவது பல சமூகங்களிலும் நடக்கின்றது. அதே சமயம் தாலி கட்டும் சமயத்தில் மணமக்களுக்கு பின்னால் காமாட்சி விளக்கை பெண்கள் கையில் வைத்திருப்பார்கள்!!!
திருமணமாகி கணவன் வீட்டிற்குள் செல்லப்போகும் செல்லும் மணப்பெண் அங்கு முதன்முதலில் காமாட்சி விளக்கு ஏற்றுவதற்கும் இதுவே காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள் புரிவதால், முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதன் மூலம், அவர்களில் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்காகும். பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்லத்துடன் தினமும் காமாட்சி விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.
மணப் பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பர்.
புதுமனைக்குப் போகும் போது அவசியம் காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும். எங்கும் இருள் விலகி, சகல நன்மைகளும் நமக்குக் கிடைக்க காமாட்சி விளக்கில் தீபமேற்றி காமாட்சியம்மனின் அருளைப் பெறுவோம். மங்கல காமாட்சி விளக்கை ஏற்றும் இல்லங்களில் மகாலட்சுமியின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நன்றி :__ உமா ராதாகிருஷ்ணன்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
May be an image of text