தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆதாரமில்லாத , அனாவசிய நம்பிக்கைகள் வேண்டாமே!!!
எங்கு சென்றாலும் மூன்று பேராகச் செல்லக் கூடாது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதற்கு ஆன்மீக ரீதியிலோ விஞ்ஞான ரீதியிலோ எந்த ஆதாரங்களும் இருப்பதாக தெரியாவில்லை !!!
ராமன், லட்சுமணன், சீதை – மூவரும் சேர்ந்து வனவாசம் சென்றனர். ராமன், லட்சுமணன், விஸ்வாமித்திரர் மூவரும் வேள்விக்காக சேர்ந்து சென்றனர். தேவகி, வசுதேவர், கம்சன் ஆகிய மூவரும் தேரில் ஏறி புக்ககம் சென்றனர். படைத்தல், காத்தல், அழித்தல்- இந்த மூன்று செயல்களையும் மும்மூர்த்திகள் சேர்ந்தே செய்கின்றனர். அகர- உகர- மகரங்கள் மூன்றும் சேர்ந்து, பிரணவமாகிறது.
கணவன்- மனைவி அவர்களின் கைக் குழந்தை மூவரும் சேர்ந்து பயணம் மேற்கொள்வர். அவர்களுக்கு எந்த விபரீதமும் நிகழாது. இப்படி, மூன்றாக- மூவராகச் சேர்ந்து செயல்படுவதால், நன்மையே விளைகிறது.
ஆக, மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். நல்லதை எண்ணும்போதே மனமானது எதிர் வினையையும் நினைவுக்குக் கொண்டுவந்து விடும். படுவேகமாகப் பேருந்து பயணிப்பதைப் பார்ப்பவனுக்கு, ‘இந்த பஸ் குப்புற கவிழ்ந்துவிடுமோ’ என்ற எண்ணம் தோன்றும். இதுபோலவே மூன்றைப் பற்றிய நினைப்பும்!
மூவராகச் சென்றால் ஏதேனும் விபரீதம் விளையுமோ!’ என்ற எண்ணம் எழுவது இயல்பு.
இந்த எண்ணம் தோன்றாமல் இருக்க, மன நெருடலைத் தவிர்ப்பதற்காக வேண்டுமானால் மூன்று பேராகச் செல்வதைத் தவிர்க்கலாம். மற்றும்படி எந்த ஆதாரமும் இல்லாத நம்பிக்கை இது!!!
வேலையில் முழுக் கவனம் இருப்பவனும், கடமையில் ஈடுபட்டவனும் மூன்றைப் பற்றி நினைக்கவோ கவலைப்படவோ மாட்டான். மனம் திடமாக இருந்தால், மூவர் சேர்ந்து போகலாம். மற்றபடி ‘மூவராகச் செல்லக் கூடாது’ என்பதெல்லாம் ஆதாரமற்ற நம்பிக்கை.
நன்றி: சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal