நண்பர்களே, அறிந்து கொள்வோம்.
விரதத்துக்காகவே அமைந்த மாதம் புரட்டாதி!-
நம்முடைய இந்து சமயத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்களைக் கொண்டதொரு சமயமாக அமைந்து காணப்படுகின்றது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் புரட்டாதி மாதம் விரததுக்காகவே அமைந்த ஒரு புண்ணிய மாதமாகப் காணப்படுகிறது .
தமிழ் மாதங்கள் பன்னிரெண்டிலும் புரட்டாதிக்கு எனத் தனி மகிமையுண்டு.பல மதத்தவர்களாலும் போற்றி வழிபடப்படும் விக்கினம் தீர்க்கும் விநாயகப் பெருமானின் ஆவணிச் சதுர்த்தி விரதத்தைத் தொடர்ந்து முதலாவதாக வருவது சனீஸ்வர பகவானை நோக்கி அனுஷ்டிக்கப்படும் புரட்டாதிச் சனி விரதம்.புரட்டாதிக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பது பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனுஷ்டிக்கும் நவராத்திரி விரதம்.நவராத்திரி புரட்டாதி வளர்பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது தினங்கள் கொண்டாடப்படுகின்றது.வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வீரம்,செல்வம்,கல்வி ஆகிய மூன்று செல்வங்களையும் வேண்டி முறையே மலைமகள்,அலைமகள்,கலைமகள் ஆகிய தெய்வங்களைப் போற்றித் துதிக்கும் நன்னாள். நவராத்திரி பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாட்கள் என்றும் கூறலாம் .
புரட்டாதி மாதத்தில் பித்ருக்களை வழிபடும் மஹாளய நாட்கள் பதினைந்து,நவராத்திரி ஒன்பது நாட்கள் ,புரட்டாதிச் சனிக்கிழமை நான்கு அல்லது ஐந்து நாட்கள்.இதனைவிட இந்த மாதம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மாதம் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?இந்த மாதத்தில் இந்தியாவின் திருப்பதி,திருவரங்கம் உள்ளிட்ட அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாதித் திருவிழா கலை கட்டும்.
சனிபகவான் வழிபாடு,பித்ரு வழிபாடு ,சக்தி வழிபாடு ,இறை வழிபாடு என இந்து சமய வழிபாட்டின் பல அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும் புரட்டாதி மாதம் விரத்துக்குரிய மாதம் என்பதை நிறுவிட இதற்கு மேலும் வேறென்ன வேண்டும்!
நன்றி:-குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,
Comments by Dr. N. Somash Kurukkal