சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்!
யாழ்ப்பாண சிவாச்சார்யர்களுக்குள் இன்றும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரிதும் போற்றப்படும் ஒரு சில அறிஞர்களுள் முக்கியமானவர் சுன்னாகம் சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக்குருக்கள்.
வேதம், ஆகமம், தமிழ், சம்ஸ்கிருதம், ஜோதிடம், சைவ சித்தாந்தம், தர்மசாஸ்திரம் இவைகளில் நல்லறிவு பெற்ற குருக்கள் கணனி அறிவும் மிக்கவர்.
வித்தியாசமாக, தனித்துவமாக சிந்திக்கும் ஆற்றலும் நிறைந்த பேச்சாற்றலும் கொண்ட குருக்கள் அவர்கள் எல்லோரையும் தட்டிக் கொடுக்கும் பண்பாளர்.
சுன்னாகம் கதிரமலை சுவர்ணாம்பிகா சமேத பொன்னம்பலவாணேசுவர சுவாமி ஆலய சிவாச்சார்யரான இவர் கிரியைகள் செய்யும் முறைமை தனித்தன்மையுடையது.
கலை ஆர்வமும் கலை ஞானமும் கொண்ட குருக்கள் 1965இல் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தை ( Modern Hindu Culture . Org )உருவாக்கினார்.
ஐரோப்பிய நாடுகளிலும் தனது ஆகம விரோதமற்ற புதுமையான பணிகளால் இந்து சமயத்தை குருக்கள் நிலை நிறுத்தி வருகிறார்.
அவர் தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஊரவர்கள், அன்பர்கள் என்று எல்லோரையும் அரவணைத்து அவர்கள் வழி கலை, பண்பாடு, சமயப் பணிகளை குருக்கள் மிக லாவகமாக முன்னெடுப்பது வியப்பை தரும்.
தற்போது ரொறன்ரோ வரசித்தி விநாயகர் ஆலய சிவாச்சார்யராக திகழும் குருக்கள் இன்னும் இளமை துடிப்போடு பணியாற்றுகிறார்.
சென்ற ஆண்டு (2019) சண்டிருப்பாயில் வேதாகம பாடசாலை உருவாக்கத்திற்கும் குருக்கள் முன்னோடியாக திகழ்ந்தார்.
குருக்களின் பணிகளுக்கு இராமனுக்கு கிடைத்த லக்ஷ்மணன் போல சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக்குருக்கள் உறுதுணையாக உள்ளார். அவர் தனித்துவமான ஆளுமையாகவும் திகழ்கிறார்.
நம் தேசத்து புகழை நிலை நிறுத்தும் குருக்கள் அவர்கள் தமிழகத்து வேதாகம பாடசாலை முதல்வர்களான சிவாச்சார்யர்களால் பெரிதும் மரியாதையோடு அழைத்து கௌரவிக்கப்படுவதும் அவதானத்திற்குரியது.
குருக்கள் பல்துறை அறிஞர் மட்டுமல்ல பல்வகை விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவர். அவரிடம் நடனம், இசை, ஓவியம், சமையல், விளையாட்டு, அரசியல், பொருளாதாரம், ஆயுர்வேதம் என்று எது பற்றி பேசினாலும் சுவாரசியமாக பேசலாம்.
பழனி ஈசான சிவாச்சார்யரிடம் தீக்ஷை பெற்ற குருக்களின் பிறந்த நாள் இன்று.. நம் தேசத்து ஆளுமை சேர் பெரியவரை வாழ்த்துவோம்…
நன்றி: தி.மயூரகிரி சிவாச்சார்யார் – நீர்வேலி.
பகிர்வு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , நிறுவன ஆன்மீக இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less