-
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.
இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.
முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன
-நன்றி ”தெய்வத்தின் குரல்”
September 25, 2019
Comments by Dr. N. Somash Kurukkal