ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!
நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். அரிஹர புத்திரனாகிய இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம்.
ஆதிசாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அவற்றுள் ஒன்று கல்யாண வரத சாஸ்தா. இவர், பிரம்மனின் புதல்விகளான பூரணை- புஷ்கலை ஆகியோரை மணம் செய்த கதையை புராணங்களில் காணலாம் (பூரணை- புஷ்கலை தேவியர் குறித்து பல்வேறு கதைகள் உண்டு). இந்த அவதாரத்துக்குப் பிறகே இவர், சுவாமி ஐயப்பனாக அவதரித்து, பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்து, அதர்மமே உருவான மகிஷியை அழித்தார். இதுவே சாஸ்தாவின் கடைசி அவதாரம் என்பர்.
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தின் காமக் கோட்டத்தைக் காக்கும் பூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீஐயனார் மூர்த்தி, ஆதிசாஸ்தாவின் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்!’ என்பது காஞ்சி மகா பெரியவரது கருத்து. ஆதிசாஸ்தாவை ஸ்ரீபூதநாதர் என்றும் வழங்குவர். இவரது எட்டு அவதாரங்களும் மகிமை வாய்ந்தவை.
சம்மோஹன சாஸ்தா : நமது வீட்டையும் குடும்பத்தையும் காக்கும் தெய்வமான இவர், இல்லறத்தில் ஒற்றுமையை மலரச் செய்பவர். பூரணை- புஷ்கலை தேவியருடன் காட்சி தருவார்.
கல்யாண வரத சாஸ்தா: கோயில்கள் சிலவற்றில் தன் தேவியருடன் காட்சி தரும் இந்த சாஸ்தாவை வழிபட்டால், செவ்வாய் தோஷம் மற்றும் தடைகள் விலகி விரைவில் திருமணம் கை கூடும்.
வேத சாஸ்தா: இவர், சிம்மத்தின் மீது தேவியருடன் அமர்ந்திருப்பார். வேதத்தை தழைக்கச் செய்பவர். சாஸ்திர அறிவை அருள்வதுடன், அதன்படி நம்மை வழி நடத்தவும் செய்யும் தெய்வ சொரூபமாக இவரைக் கருதுவர். கல்வி, கேள்வி ஞானத்தில் சிறக்க இவரை வழிபட வேண்டும்.
ஞான சாஸ்தா: ஸ்ரீதட்சிணாமூர்த்தியைப் போன்று கையில் வீணை ஏந்தி, சீடர்கள் அருகில் இருக்க, கல்லால மரத்தின் கீழ் குரு பீடத்தில் அமர்ந்து, கல்வி அறிவை வழங்கும் கோலத்தில் காட்சி தருபவர். இவரை வழிபட்டால் பேச்சுத் திறன் அதிகரிக்கும்.
மகா சாஸ்தா: இவர், நான்கு திருக்கரங்களுடன் யானை மீது அமர்ந்து காட்சி தருவார். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கி அருளும் இந்த மூர்த்தியை வழிபட்டால், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.
வீர சாஸ்தா: இவர், ருத்ர மூர்த்தியாக திகழ்பவர். ஆயுதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், குதிரையின் மீது அமர்ந்து, தீயவர்களை அழிக்கும் கோலத்தில் காட்சி தருவார். இவரை வணங்கினால், கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
ஸ்ரீதர்ம சாஸ்தா: இவரே சபரிமலையில் குக்குட ஆசனத்தில் அமர்ந்து சுவாமி ஐயப்பனாக அருள்புரிகிறார். கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை வழிபட சகலவிதமான துன்பங்களும் நீங்கி, வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.
பிரம்ம சாஸ்தா: தன் பத்தினிகள் இருவருடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருபவர். மலட்டுத் தன்மை நீங்கி, குழந்தைச் செல்வம் பெற இந்த பிரம்ம சாஸ்தாவை வழிபட வேண்டும்.
முருகப் பெருமானைப் போன்றே சுவாமி ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை: அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், எருமேலி மற்றும் சபரிமலை.
பரசுராமர், கேரள பூமியில் மொத்தம் 108 இடங்களில் திருக்கோயில் அமைத்தாராம். அவற்றுள் 18 கோயில்களில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். சபரிமலை திருக்கோயிலில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவரும் பரசுராமரே. சுவாமி ஐயப்பன், பூலோகத்தில் தனது அவதார நோக்கம் முடிவடைந்ததும் (பன்னிரண்டாம் வயதில்) இந்த விக்கிரகத்தில்தான் ஐக்கியமானார் என்பது புராணக் கூற்று.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!
Scroll to top