நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!
பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!!
ஆனால் இந்த வழிபாடு , கேரளாவில் மிக மிக பிரசித்தம்!!! நிர்மால்ய தரிசனம் என்பது, முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது பூக்களை அகற்றுங்கள். முடியுமானால், மாலை வேளையிலும் பூஜை செய்ய முயலுங்கள். அப்போது வாடிய பூக்களை மாலையிலேயே அகற்றலாம்.
பூஜையைப் பற்றி ஒரு விளக்கம் உண்டு. இந்த உடல் இருக்கிறதே, அது கோயில். உள்ளே உட்கார்ந்திருக்கிற உயிர் இருக்கிறதே, அது கடவுள். அஞ்ஞானம் என்பதான நிர்மால்யத்தை வெளியிலே தள்ளி பூஜையை ஆரம்பி என்பார்கள். அஞ்ஞானம் என்பது நிர்மால்யம். நேற்றுப் போட்டது நிர்மால்யம். அதை அகற்றிவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ‘நான் ஏற்கெனவே நாலு நாளைக்கு முன்னால் அகற்றி விட்டேன்’ என்று சொல்லக் கூடாது. `தேகோ தேவாலய ப்ரோக்த: ஜீவோ தேவ ஸநாதன: தெஜேயத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேன பூஜயேத்’ என்பது ஸ்லோகம்.
அதிகாலையில் கர்ப்பக்கிரகம் திறந்தவுடன் முதல் நாள் நிகழ்ந்த பூஜை அலங்காரங்களைக் கலைப்பதற்கு முன்பு கடவுளைக் காண்பது நிர்மால்ய தரிசனம்! முந்தைய இரவு பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட புஷ்பங்கள், மாலைகள் மறு நாள் காலையில் ‘நிர்மால்ய’ நிலையை அடைகிறது. அதை அகற்றுவதற்கு முன்பு ஒரு தடவை அந்த அலங்காரத்தோடு தெய்வ தரிசனம் செய்வது சிறப்பல்லவா!
அன்னாபிஷேகம் முடிந்த பிறகு, அதைக் கலைப்பதற்கு முன் ஒரு தடவை அந்த அழகைப் பார்த்து விடுவோம். திரும்பப் பார்க்க இயலாது என்று பக்தர்கள் காத்திருப்பது உண்டு. பிரதோஷ காலத்தில் வலம் வந்த பிறகு அணிகலனோடு திகழும் ஆண்டவனை ஆலயத்திலிருந்து செல்லுமுன் மீண்டும் ஒரு முறை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பக்தனுக்கு ஏற்படும். அந்த தரிசனம் சிறப்பல்லவா!
கடவுள் தரிசனத்தில் சிறப்பு- சிறப்பில்லாதது என்ற பாகுபாடு இல்லை. நம் மனம்தான் இப்படிப் பாகுபடுத்திப் பார்க்கிறது. சந்தன அபிஷேகம் செய்ததும் ஒரு தடவை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபடுவது உண்டு. சந்தனத்தோடு அழகு ததும்பும் அவன் வடிவத்தை மற்றொரு முறை பார்ப்பதற்கு அந்த ஆரத்தி நமக்கு உதவுகிறது. அந்தச் சந்தனம் உடன் கலைக்கப்படும். ஆதலால், அந்த அபிஷேகக் காட்சி சிறப்பல்லவா!
லிங்க வடிவில் தோன்றிய ஈசனுக்கு விபூதி அபிஷேகம் நிகழும். விபூதியில் மூழ்கிய அவனை தரிசிப்பது சிறப்பல்லவா!
கடவுள் வழிபாட்டில் ஒவ்வொன்றும் சிறப்புதான். பக்தர்களைத் தூண்ட ‘சிறப்பு’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவோம். அப்பாவி மக்களை, கடவுளோடு நெருங்க வைத்து, அவர்கள் மனதைச் செம்மைப்படுத்த உதவும் ஒவ்வொரு பூஜையும் சிறப்பானதே. அப்போதுதான் அதைக் காண பக்தர்கள் விரும்புவார்கள். எந்த வகையில் பார்த்தாலும் நிர்மால்ய தரிசனம் சிறப்பு வாய்ந்தது. தினமும் அதிகாலையில் எழுந்து தரிசனம் செய்யுங்கள்.
நிர்மால்ய தரிசனம் என்பது, கோயில்களில் கடவுள் விக்கிரகங்களுக்கு இரவில் அணிவிக்கப்பட்ட மாலைகள் மற்றும் மலர்களுடன், எந்தவிதமான சடங்குகளோ, அபிஷேகங்களோ செய்யப்படுவதற்கு முன்பு அதிகாலையில் வழங்கப்படும் முதல் தரிசனமாகும். இது மிகவும் புனிதமானதாகவும், ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கு விஸ்வரூப தரிசனம் என்ற பெயரும் உண்டு.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!
Scroll to top